×

தூசூர் ஏரியில் வெட்டவெட்ட முளைக்கும் கருவேல மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்படுமா?

நாமகிரிப்பேட்டை, ஜன.18:  தமிழகம் முழுவதும் ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் உள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என கடந்த 2016ம் ஆண்டு இறுதியில் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அரசுக்கு சொந்தமான இடங்கள், ஏரிகள், குளங்கள் மற்றும் கால்வாய்களில் படர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணிகள், தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில் மிக குறைவான இடங்களில் மட்டுமே இப்பணிகள் நடந்தது. இதையடுத்து, அரசுக்கு சொந்தமான நீர்நிலைகளில், சீமை கருவேல மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணிக்கான டெண்டர் விடப்பட்டது. இதன்படி டெண்டர் எடுத்தவர்கள், பல இடங்களில் வேறுநபர்களிடம் மரங்களை அகற்றும் பணியை ஒப்படைத்தனர். இவர்கள் விறகு பயன்பாடு உள்ளிட்டவற்றுக்காக இயந்திரங்கள் மூலம் மரங்களை மட்டும் அறுத்து எடுத்தனர். வேருடன் மரங்களை அகற்றவில்லை. மேலும், மரங்களைஅகற்றும் போது மரங்களில் உள்ள காய்கள் நிலத்தில் கொட்டின. அந்த காய்கள் காய்ந்தவுடன் நிலத்தில் விதைகளாக பரவி தற்போது மீண்டும் அதிகளவில் சீமைக்கருவேல மரங்கள் முளைக்க தொடங்கியுள்ளன. இதனால் சீமைக்கருவேல மரங்களை அகற்றியும், பயனில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தூசூர் ஏரி உள்பட பல்வேறு நீர்நிலைகளில், சீமை கருவேல மரங்களை வேருடன் அகற்றாததால், அவை மீண்டும் மீண்டும் முளைத்த வண்ணம் உள்ளன. இதனால், நீராதாரங்கள் பாதிக்கப்படுகின்றன. இதை தவிர்க்க, சீமை கருவேல மரங்களை வேருடன் அகற்றுவதோடு, அந்த இடங்களில் வேறு வகையான மரக்கன்றுகளை நடலாம். இதன் மூலம், மீண்டும் சீமை கருவேல மரங்கள் முளைப்பதை தடுக்கலாம். இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : lake ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு