×

ஊனங்கல்பட்டியில் மாடு பூ தாண்டும் விழா

நாமகிரிப்பேட்டை, ஜன.18: மோகனூர் அருகே, ஊனங்கல்பட்டியில் மாடு பூ தாண்டும் விழா நடந்தது. நாமக்கல் அடுத்த மோகனூர் அருகே ஊனங்கல்பட்டியில், வீரக்காரன் கோயிலில், ஆண்டுதோறும் தை முதல் நாளில் காப்புகட்டுடன் திருவிழா தொடங்குகிறது. 5 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், சிறப்பு பூஜைகள் நடைபெற்று தை 3ம் நாளில் மாடு பூ தாண்டும் விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு திருவிழாவிற்கு சின்னத்தாம்பட்டி, குன்னத்தூர், மல்லுமாச்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாடுகளை வரவழைத்து பூ தாண்டும் விழா நடைபெற்றது. முன்னதாக ஆவாரம்பூ, மஞ்சள், செவ்வந்தி பூக்கள் கொண்டு பெரிய அளவில் கோடு அமைத்து முதலில் கோயில் மாடு பூ தாண்டியது. இதனை தொடர்ந்து அனைத்து மாடுகளும் பூக்கோட்டை தாண்டியது. திருவிழாவை காண சுற்றுவட்டார பகுதியில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர்.இந்த விழாவிற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், மத்திய முன்னாள் இணை அமைச்சருமான காந்திசெல்வன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளரும், மோகனூர் ஒன்றிய திமுக பொறுப்பாளருமான நாவலடி, ராசிபுரம் ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், மோகனூர் பேரூர் செயலாளர் செல்லவேல், ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் சத்யபாபு, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் நவீன் மற்றும் கோயில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Tags : cow flower ceremony ,Unaangalpatti ,
× RELATED சந்தைக்குள் புகுந்து மின் ஒயர்கள் திருட்டு