அரிமளம், ஏம்பல் வழியாக திருப்புனவாசல் செல்லும் பேருந்து திடீர் நிறுத்தம் கிராம மக்கள் அவதி

புதுக்கோட்டை, ஜன.18:  புதுக்கோட்டையில் இருந்து அரிமளம், ஏம்பல் வழியாக திருப்புனவாசல் செல்லும் புறநகர் பேருந்து கடந்த சில நாட்களாக வராததால் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர். சிவகங்ககை மாவட்டம், கராரைக்குடிக்கு அருகே கே.புதுப்பட்டி, கரூர், ஏம்பல் உள்ளது. இந்த ஊர்களை சுற்றி பல நூறு குக்கிராமங்கள் உள்ளன. இந்த ஊர்கள் அனைத்தும் புதுக்கோட்டை மாவட்ட எல்லைக்குள் இருக்கிறது. இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் நிர்வாக ரீதியான பணிகளுக்கு மட்டும் புதுக்கோட்டை வருவார்கள். நகர்புறத்திற்கு செல்ல வேண்டுமானால் காரைக்குடி செல்வார்கள். இந்நிலையில் இவர்களின் வசதிக்காக புதுக்கோட்டையில் இருந்து தினசரி ஒரு புறநகர் பேருந்து இயக்கப்பட்டது. இந்த புறநகர் பேருந்து புதுக்கோட்டையில் புறப்பட்டு அரிமளம், கே.புதுப்பட்டி, கரூர், ஏம்பல், திருப்புனவாசல் சென்று மீண்டும் திரும்பி புதுக்கோட்டை வரும். இந்த பேருந்தால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த பயனடைந்து வந்தனர். இந்நிலையில் இந்த வழித்தடங்களில் சென்ற புறநகர் பேருந்து கடந்த சில நாட்களாக வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் இருந்து புதுக்கோட்டைக்கு வர முடியாமல் கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் போக்குவரத்துத்துறை தகுந்த நடவடிக்கையை எடுத்து பேருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது, புதுக்கோட்டையில் இருந்து திருப்புணவாசல் வரும் பேருந்தால் நாங்கள் பெரிதும் பயனடைந்தோம். ஆனால், தற்போது சில நாட்களாக இந்த பேருந்து வரவில்லை. வெளியூருக்கு இந்த பேருந்து அனுப்பி விட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் வெளியூருக்கு அனுப்ப வேண்டுமானால் வேறு பேருந்துகளை அனுப்ப வேண்டியதுதானே. எங்களுக்கு வரும் பேருந்துதான் கிடைத்தா?. இதனால் நாங்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றோம். இதுபற்றி தகுந்த நடவடிக்கை எடுத்து அந்த பேருந்தை இயக்க வேண்டும் என்றனர்.

× RELATED திருவள்ளூர் பஸ்டெப்போ அருகே பஸ்...