புதுகை மாவட்டத்தில் புயலுக்கு பின் பணி செய்ய போதிய நிதியின்றி திணறி வரும் கிராம ஊராட்சிகள்

புதுக்கோட்டை, ஜன.18:  புதுக்கோட்டை  மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் போதிய நிதி இல்லாமல்  தெரு  விளக்குகளைகூட சரி செய்ய முடியாமல் ஊராட்சி செயலாளர்கள் திணறி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 கிராம ஊராட்சிகள் உள்ளன.  இந்த ஊராட்சிகள் அனைத்தும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின்  கட்டுப்பாட்டில் உள்ளது. குறிப்பாக கிராம ஊராட்சிகளில் வசிக்கும்  மக்களுக்கு குடிநீர் விநியோகம், தெரு விளக்கு அமைத்தல், தூய்மை பணி  மற்றும் அரசின் நலத்திட்டங்கள் அதிகாரிகள் கவனித்துகொள்வார்கள். இதற்கு  ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் ஊராட்சி செயலாளர்கள் பணியில் இருப்பார்கள்.  
இவர்கள் இந்த பணியை தொடர்ந்து மேற்கொள்வார்கள்.  பல  கிராமங்களில் எல்இடி பல்புகள் மாற்றம் செய்யப்பட்டது. இதனால் இரவு  நேரங்களில் கிராமத்தில் அச்சமின்றி பொதுமக்கள் வந்து சென்றனர்.
 இந்நிலையில்  புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் கோர தாண்டவம் ஆடியது. இதனால் மின்  கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. இதனால் கிராமங்களில் உள்ள தெரு விளக்குகள்  முற்றிலும் சேதடைந்துவிட்டது. இரவு நேரங்களில் கிராம பகுதிகள்  இருட்டாக காட்சியளிக்கிறது. தெரு விளக்குகளை மாற்ற கிராம ஊராட்சியில் போதிய  நிதியில்லை. இதனால் ஊராட்சி செயலாளர்கள் இந்த பணியை செய்ய முடியாமல் திணறி  வருகின்றனர்.
தெருவிளக்கை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் ஊராட்சி  செயலாளர்களிடம் தெரிவிக்கும்போது அவர்கள் செய்வதறியாது புலம்பி  வருகின்றனர். உள்ளாட்சி பிரதிகள் இருந்தால் பழுதானவுடன் அவர்கள் பணத்தில்  சரி செய்துவிட்டு பின்னர் பில் போட்டு பணம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால்,  தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லை. கிராம ஊராட்சிகளுக்கு சொற்ப  அளவில் மட்டுமே நிதி தருகின்றனர். அந்த நிதியை வைத்து பராமரிப்பு பணி கூட  செய்ய முடியாது. இந்நிலையில் கஜா யுயலால் பழுதான தெரு விளக்குகளை கிராம  ஊராட்சி செயலாளர்களால் செய்ய முடியாது. சில ஊராட்சிகளில் அவர்கள் சொந்த  பணத்தில் சரி செய்துவிட்டு பிறகு பில் போட்டு எடுத்துக்கொள்கின்றனர். ஆனால்,  பெருவாரியான ஊராட்சிகளில் தெருவிளக்குகள் எரியாமல் இருட்டாகத்தான்  இருக்கிறது. இதனால்  மாவட்ட நிர்வாகம் தகுந்த நவடிக்கை எடுத்து போதிய நிதி  ஒதுக்கி தெரு விளக்குகளை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

× RELATED வலங்கைமான் ஒன்றியத்தில் கிராம...