×

காணும் பொங்கலையொட்டி பெரம்பலூரில் விளையாட்டு போட்டி

பெரம்பலூர்,ஜன.18: காணும் பொங்கலையொட்டி பெரம்பலூர் பகுதியில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து கரிநாள் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 15ம் தேதி கண்ணால் காணும் கடவுளான சூரிய பகவானை வழிபட்டு, சூரிய பொங்கல் கொண்டாடிய தமிழர்கள், 16ம் தேதி உழவு தொழிலுக்கு உற்ற தோழனான மாடுகளை கவுரவிக்கும் விதமாக மாட்டு பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர். இதைதொடர்ந்து நேற்று காணும் பொங்கல் எனப்படும் கரிநாள் திருநாள் ஊர்முழுக்க தெருத்தெருவாக மேடை அமைத்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.இதையொட்டி தெருவுக்குத்தெரு இளைஞர் நற்பணி மன்றம், அரசியல் கட்சிகள், மகளிர் சுயஉதவி குழுக்கள், அரிமா, ரோட்டரி சங்கங்கள், சமூக ஆர்வலர் குழுக்கள் ஆகியவற்றின் சார்பில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.  அதில் தமிழர் பெருமை பேசும் வழுக்குமரம் ஏறுதல், கயிறு இழுத்தல், பானை உடைத்தல், கபடி போட்டி மற்றும் வினாடி வினா உள்ளிட்ட அறிவுத்திறன் போட்டி, சைக்கிள் ரேஸ், சாக்கு ஓட்டம் உள்ளிட்ட உடல்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. இவற்றில் சிறுவர், சிறுமியர் விழாக்குழுவினர், பெண்கள், மாணவர்கள் ஆகியவற்றோடு பொதுமக்கள் பங்கேற்று மகிழ்ந்தனர்.

Tags : Competition ,Perambalur ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் வாள்வீச்சு...