×

போச்சம்பள்ளி அருகே நாகதேவதை வழிபாட்டிற்காக 2 ஆயிரம் பக்தர்கள் திரண்டனர்

போச்சம்பள்ளி, ஜன.18: போச்சம்பள்ளி அருகே நாகதேவதை கோயில் விழாவில் 2 ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ஆடு, கோழி பலியிட்டு வழிபாடு செய்தனர்.
போச்சம்பள்ளி அருகில் உள்ள புங்கம்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் நாகர்குட்டை மலை உள்ளது. இந்த மலை அடிவாரத்தில் நாகதேவதை அருள்பாலிக்கிறார். இக்கோயில் விழா ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும். அதன்படி, நேற்று நடைபெற்ற விழாவில் நாகதேவதை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டது. விழாவில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஊத்தங்கரை, சந்தூர், அரசம்பட்டி, இருமத்தூர், பாரூர், புங்கம்பட்டி, போச்சம்பள்ளி, திருவண்ணாமலை மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்தும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நாகதேவேதையை வணங்கினர். மேலும் ஆடு, கோழி பலியிட்டு வேண்டுதல் நிறைவேற்றினர். தொடர்ந்து சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது தேர் மீது மிளகு, உப்பு, நெல் மற்றும் விளை பொருட்களை வீசி தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தினர். இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், பண்டைய காலங்களில் கிராமங்களில் அடிக்கடி பாம்புகள் படையடுப்பது வாடிக்கையாக இருந்து வந்தது. விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளில் பாம்புகள் புகுந்து விடுவதால் மக்கள் அச்சத்திற்குள்ளாகி வந்தனர். வீடுகள் மற்றும் கண்களுக்கு பாம்புகள் தெரியக்கூடாது என வேண்டி ஆண்டுதோறும் பொங்கல் விழாவையொட்டி நாகதேவதைக்கு சிறப்பு பூஜை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளோம். பொங்கல் வைத்து ஆடு, கோழி பலியிட்டால் பாம்பு வராது என்பது ஐதீகமாக உள்ளது. இதனால், அந்த ஆண்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடு-கோழிகளை பலியிட்டு வழிபாடு செய்தோம் என்றனர். விழாவில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க பர்கூர் டிஎஸ்பி தங்கவேல் தலைமையில் பாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் முன்னிலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். விழாவையொட்டி, மலை பகுதியில் பல்வேறு தின்பண்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. மிட்டாய் கடைகள் அணிவகுத்திருந்தன. சிற்றுண்டி கடைகளில் விற்பனை களை கட்டியது. ஐஸ் வியாபாரம் சூடுபிடித்தது. ரங்க ராட்டினத்தில் ஆடியவாறு மக்கள் பொழுது போக்கினர்.

Tags : pilgrims ,Pochampalli ,Nagapettai ,
× RELATED நாகூர் தர்காவில் 467வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்