×

தமிழக ஆசிரியர் கூட்டணி கண்டனம்

ஊத்தங்கரை, ஜன.18:  ஊத்தங்கரை ஒன்றியத்தில் கடந்த ஓராண்டாக துவக்க நிலை வகுப்புகளை கவனிக்க போதிய ஆசிரியர்கள் இல்லாத அவல நிலை காணப்படுவதாக தமிழக ஆசிரியர் கூட்டணி கண்டனம் தெரிவித்துள்ளது.தமிழக ஆசிரியர் கூட்டணியின் ஊத்தங்கரை வட்டாரக் கிளையின் சிறப்பு செயற்குழு கூட்டம் ஊத்தங்கரையில் நடைபெற்றது. வட்டாரத் தலைவர் நாகேஷ் தலைமை தாங்கினார்.  வட்டார செயலாளர் லீலாகிருஷ்ணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மத்தூர் கல்வி மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் பங்கேற்றார். அப்போது, தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள பங்கேற்பு ஓய்வூதிய மாற்றம் மற்றும் ஊதியக்குழு முரண்பாடுகள் களையும் குழுக்கள் விரைவில் தனது அறிக்கைகளை வெளியிட வேண்டியதன் அவசியம் குறித்தும், அரசு பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கச் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கினார்.
மேலும், அவர் பேசுகையில், ‘அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் துவங்குவது நல்லதுதான் என்றாலும், துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை கட்டாய மாறுதல் மூலம் நியமனம் செய்ய முற்படுவது கண்டனத்திற்குரியது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, இன்னும் வேலையில்லாமல் பல ஆயிரம் பேர் காத்திருக்கும்போது, அவர்களை புதிதாக பணியில் அமர்த்தாமல், பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு கட்டாய மாறுதல் அளிக்க முற்படுவது ஏற்புடையது அல்ல. ஊத்தங்கரை ஒன்றியத்தில் ஓராண்டாக துவக்க நிலை வகுப்புகளை கவனிக்க, ஓர் இடைநிலை ஆசிரியர் கூட இல்லாமல் இருக்கும் நிலையில், அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தற்போது தன்னிச்சை முடிவை மேற்கொள்வது கண்டனத்திற்குரியது,’ என்றார்.
கூட்டத்தில், ஊத்தங்கரை மாவட்ட மகளிரணி செயலாளர் தமிழ்ச்செல்வி, கல்வி மாவட்ட பொருளாளர் செல்வம், செயற்குழு உறுப்பினர்கள் அகிலாண்டேஸ்வரி, சித்ரா, சாந்தா, சரஸ்வதி, ராம்குமார், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Tags : Tamilnadu Editorial Coalition ,
× RELATED மனைவியுடன் பஸ்சில் வந்த டிரைவர் திடீர் சாவு