×

குன்னத்தில் திமுக ஊராட்சி சபை கூட்டம் அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் சரமாரி புகார்

கொள்ளிடம், ஜன.18: கொள்ளிடம் அருகே குன்னம் கிராமத்தில் திமுக சார்பில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் அடிப்படை வசதிகள் போதிய அளவிற்கு செய்து கொடுக்கவில்லை என்று அதிமுக அரசு மீது பொதுமக்கள் சரமாரி குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே குன்னம் கிராமத்தில் கொள்ளிடம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. நாகை வடக்கு மாவட்ட செயலாளர் நிவேதாமுருகன் தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் முருகானந்தம் வரவேற்றார். கொள்ளிடம் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்லசேது ரவிக்குமார் முன்னிலை வகித்தார். திமுக மாநில இளைஞரணி துணை அமைப்பாளரும் தலைமை கழக பிரதிநிதியுமான துரை கலந்து கொண்டு ஊராட்சி சபை கூட்டத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கி பேசினார். பின்னர் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில்,
குன்னம் ஊராட்சியில் மின்விளக்குகள் எரியாமல் தெருக்கள் இருண்டு கிடக்கின்றன. சாலை வசதி, குடிநீர் வசதி போதிய அளவிற்கு இல்லை என்று குற்றம் சாட்டினர். சீர்காழியில் இருந்து புத்தூர், குன்னம், பெரம்பூர் வழியாக மாதிரவேளூருக்கு அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உப்புநீர் புகாதவாறு தடுப்பணை கட்ட வேண்டும். குறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை செய்து தருமாறு கேட்டுக்கொண்டனர். குன்னம் விவசாய சங்கத் தலைவர் ஞானசம்மந்தம் கூறுகையில், 3000 ஏக்கர் விளை நிலங்களுக்கு வடிகாலாக இருந்து வந்த அழிஞ்சியாறு திமுக ஆட்சி காலத்தில்  தூர்வாரப்பட்டது. ஆனால் தற்போது தூர்வார எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. கடந்த 2016-17 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பிட்டு தொகையையும் 2018 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பிட்டு தொகையையும் உடனே பெற்றுத்தர ஆவன செய்ய வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்து தலைமை கழக பிரதிநிதி துரை கூறுகையில், அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்கப்படும். நீண்ட நாள் கோரிக்கைகள் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும் என்றார். முன்னாள் எம்.எல்.ஏக்கள் வக்கீல் பன்னீர்செல்வம், அன்பழகன், சித்திக், பாலஅருள்செல்வம் மாவட்ட அவைத்தலைவர் சீனிவாசன், நகர செயலாளர்கள் சுப்பராயன், குண்டாமணி, அமிர்தரவி, ஒன்றிய செயலாளர்கள் சசிகுமார், பிரபாகர், அன்பழகன், மாலிக், மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : meeting ,DMK ,Panchayat Council ,Kunnam ,
× RELATED கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்