×

சந்து கடைகளில் மது விற்பனை அதிகரிப்பு

பென்னாகரம், ஜன.18: ஒகேனக்கல்லில், சந்துக்கடைகளில் மது விற்பனை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பென்னாகரம் அருகே கூத்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒகேனக்கல், ஊட்டமலை, முதலைபண்ணை, மீன் மார்க்கெட் பகுதிகளில் சந்துக்கடை மற்றும் வீடுகளில் மது விற்பனை அதிகளவில் நடக்கிறது. தேசிய, மாநில நெடுஞ்சாலையோரம் டாஸ்மாக் மது கடைகள் இருக்கக்கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவால் பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை பகுதியில் டாஸ்மாக் கடைகள் இல்லை. இதனால், ஒகேனக்கல் பகுதியில் உள்ள ஒரு சிலர், குள்ளாத்திரம்பட்டி, கடத்திகெட்டு மற்றும் நாட்றாம்பளையம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மொத்தமாக மதுவகைகளை வாங்கி பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்கின்றனர். இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்பவர்களை பிடிக்க, மது விலக்கு பிரிவு போலீசார் உள்ளனர். ஆனால், இதுநாள் வரை சந்துக்கடைகளில் அவர்கள் சோதனை நடத்தவில்லை. எனவே, சந்துக்கடைகளில் மது விற்பனையை தடுக்க மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க, ஒகேனக்கல்லில் டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : alcohol stores ,
× RELATED தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.626 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை