×

சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொடியேற்றம்

தர்மபுரி,ஜன.18: தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசுவாமி கோயில் தைப்பூசத் தேர்த்திரு விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது.
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசுவாமி கோயிலில் தைப்பூசத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி காலை 9 மணிக்கு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 11 மணியளவில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி சிவசுப்ரமணியசுவாமி அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு சிவசுப்ரமணியசுவாமி ஆட்டுக்கிடா வாகனத்தில் திருவீதி உலா நடந்தது. இன்று (18ம் தேதி) புலி வாகன உற்சவம், 19ம் தேதி பூத வாகன உற்சவம், 20ம் தேதி நாக வாகன உற்சவம் நடக்கிறது. 21ம் தேதி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு சாலை விநாயகர் கோயிலிலிருந்து பால்குடம்  ஊர்வலம் நடக்கிறது. இரவு 10 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம், இரவு 12 மணிக்கு பொன்மயில் வாகனத்தில் சுவாமி தம்பதி சமேதர் திருவீதி உலா நடக்கிறது. 22ம் தேதி மாலை 5 மணிக்கு விநாயகர் தேரோட்டம் மற்றும் யானை வாகன உற்சவம் நடக்கிறது.விழாவின் முக்கிய நாளான 23ம் தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு பெண்கள் மட்டுமே வடம் பிடிக்கும் தேரோட்டமும், மாலை 4 மணிக்கு வாணவேடிக்கையுடன் வண்ண விளக்குகளுடன் அலங்கரிக்கப்பட்ட மகாரத தேரோட்டமும் நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு பாரிமுனை நண்பர்கள், வாரியார் அன்னதான அறக்கட்டளை சார்பில் 10 ஆயிரம் பக்தர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் விழாவும், மாலை 6 மணிக்கு ஏழைகள் அன்னதானக் கமிட்டி சார்பில் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழாவும் நடக்கிறது. வரும் 24ம் தேதி வேடர்பறி குதிரை வாகன உற்சவமும், 25ம் தேதி கொடியிறக்கம் மற்றும் பூப்பல்லக்கு உற்சவமும், 26ம் தேதி சயன உற்சவமும் நடக்கிறது.



Tags : Sivasubramaniya Swami Temple ,
× RELATED தர்மபுரி சிவசுப்பிரமணிய சுவாமி...