×

மீனாட்சிபுரத்தில் மிரட்டும் கிணறு - வாகனங்கள் உள்ளே பாயும் அபாயம்

திருச்சுழி, ஜன.18:  திருச்சுழி அருகே குறைவான உயர சுற்றுச்சுவருடன் சாலையோரம் பாழடைந்த கிணறு உள்ளது. இதில் வாகனங்கள் பாய்ந்து விபரீதம் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திருச்சுழி  அருகே மீனாட்சிபுரம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்திற்கு செல்லும் சாலையில்  பயன்பாடின்றி பாழடைந்து புதர் மண்டிய நிலையில் பெரிய கிணறு உள்ளது.  இந்த கிணற்றில் சுற்றுச்சுவர் குறைவான உயரத்தில் உள்ளது. இதனால் இந்த வழியாக வரும் வாகனங்கள் கிணற்றினுள் பாயும் அபாயம் நிலவுகிறது.  மேலும் கிணற்றை ஒட்டிய சாலையின் வழியாகவே இக்கிராமத்தில் உள்ள பெரும்பாலான மாணவ, மாணவிகள் அருகில் உள்ள பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.  இரவு நேரங்களில் இவ்வழியாக வேலை முடிந்து அதிகளவில் பொதுமக்கள் வருகின்றனர். இந்த குறிப்பிட்ட இடத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் இருளில் கிணறு இருப்பது தெரியாமல் தவறி விழும் நிலை உள்ளது. எனவே சம்பந்தபட்ட ஊராட்சி நிர்வாகம் கிணற்றை சுற்றி உயரமான தடுப்புச்சுவர் கட்ட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து மீனாட்சிபுரம் கிராமமக்கள் கூறுகையில், ‘‘திருச்சுழி,   அருப்புக்கோட்டை செல்ல வேண்டுமென்றால் பாதுகாப்பற்ற நிலையிலுள்ள கிணறு வழியாகத்தான் பயணிக்க வேண்டியுள்ளது. கிணறும் சாலையும் மட்டமான நிலையில் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அச்சத்துடன் இரவு நேரத்தில்  பயணிக்க வேண்டியுள்ளது. எனவே இக்கிணற்று பகுதியில் பாதுகாப்பு கருதி தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்’’ என்றனர்.


Tags :
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...