×

கம்ப்யூட்டர் இல்லாததால் பயோமெட்ரிக் செயல்பாட்டில் சிக்கல்

சிவகங்கை, ஜன. 18: சிவகங்கை மாவட்ட உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகளில் கம்ப்யூட்டர் இல்லாததால் பயோமெட்ரிக் கருவி செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமுள்ள 196 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு பயோமெட்ரிக் கருவி கடந்த வார இறுதியில் வழங்கப்பட்டுள்ளது. பள்ளியில் உள்ள கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ள இக்கருவி கல்வி மாட்ட அளவிலும், மாநில அளவிலும் கல்வித்துறையுடன் இணைப்பில் இருக்கும். இதுபோல் 12 வட்டார கல்வி அலுவலகங்கள், 12 வட்டார வளமையங்கள், 3 மாவட்ட கல்வி அலுவலகங்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 420 பயோ மெட்ரிக் இயந்திரம் செயல்பாட்டிற்கு வர உள்ளது.
லேட்டஸ்ட் மென் பொருள்களுடன் செயல்படும் வடிவிலான கம்ப்யூட்டர்கள் அலுவலகங்களில் உள்ளதால் இங்கு பயோ மெட்ரிக் கருவிகள் செயல்படுவதில் சிக்கல் இல்லை. ஆனால் பெரும்பாலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கம்ப்யூட்டர்களே இல்லை. கம்ப்யூட்டர் பாடப்பிரிவு உள்ள பள்ளிகளில் கம்ப்யூட்டர்கள் இருந்தாலும் அவைகள் அனைத்தும் பழைய வெர்சன்களை கொண்டதாகும். மிகவும் மெதுவான செயல்பாட்டை கொண்ட இந்த கம்ப்யூட்டருடன் உள்ள சி.பி.யு.வில் தற்போதைய மென் பொருட்களை ஏற்ற முடியாது.ஆனால் இது குறித்து எந்த ஆய்வும் செய்யாமல் எந்த முன் தயாரிப்பும் இல்லாமல் பயோமெட்ரிக் கருவிகளை பள்ளிகளுக்கு வழங்கி கம்ப்யூட்டருடன் இணையுங்கள் எனக்கூறியதால் என்ன செய்வது என தெரியாமல் தலைமை ஆசிரியர்கள் அவதியடைந்து வருகின்றனர். அவர்கள் கூறியதாவது: பயோமெட்ரிக் கருவி ரூ.1000 கூட பெறாது. அதை கொடுத்துவிட்டால் இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்த முடியும். ஒரு கம்ப்யூட்டர் வாங்க குறைந்தது ரூ.25 ஆயிரமாவது வேண்டும்.கம்ப்யூட்டரே இல்லாமல் இந்த கருவியை மட்டும் வைத்து எதுவும் செய்ய முடியாது என தெரிவித்தால், ஏதாவது செய்யுங்கள் என கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அரசு சார்பில் மாவட்டங்களில் உள்ள கல்வி அலுவலர்களுக்கு அழுத்தம் கொடுப்பதால், அவர்கள் தலைமையாசிரியர், ஆசிரியர்களை பணம் போட்டு கம்ப்யூட்டர் வாங்கி வைக்க வேண்டும் என மறைமுகமாக கூறுகின்றனர். ஏற்கனவே பல்வேறு செலவுகளை நாங்களே செய்து வரும் நிலையில் தொடர்ந்து அழுத்தம் தருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. மாநிலம் முழுவதும் இது தான் நிலை. இதனால் இந்த திட்டம் பெயரளவில் தான் இருக்கப்போகிறது’ என்றனர்.


Tags :
× RELATED கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்