×

பொய்த்தது பருவமழை ஏமாற்றியது கடலை விளைச்சல்

மானாமதுரை, ஜன. 18: மானாமதுரை அருகே உருளி கிராமத்தில் பருவமழை பொய்த்துபோனதால் மழையை எதிர்பார்த்து கடலை பயிரிட்ட விவசாயிகள் பரிதவிப்புக்கு உள்ளாகினர். தண்ணீரின்றி கடலை செடிகள் கருகி வருவதால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.மானாமதுரை அருகே உருளி கிராமத்தில் பருவமழை மற்றும் வாய்க்கால் தண்ணீரை பயன்படுத்தி பருத்தி, மிளகாய், தட்டைப்பயிறு, கடலை உள்ளிட்ட பயிர்களை பருவகாலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த வருடம் மானாமதுரை வட்டார பகுதியில் போதுமான மழை இல்லாததாலும், கண்மாய், வரத்துக்கால்வாயில் வந்த தண்ணீர் போதுமானதாக இல்லாததாலும் ஏராளமான விவசாயிகள் பம்ப்செட் மூலம் விவசாயம் செய்து இருந்தனர்.குறிப்பாக உருளிகிராமப் பகுதியில் 50 ஏக்கரில் கடலை, தட்டைப்பயிறு, மிளகாய், உளுந்து பயிரிட்டு இருந்தனர்.தற்போது பருவமழை பொய்த்துபோனதுடன் வறட்சியான வானிலை நீடித்து வருவதால் கிணறுகளில் நீர்மட்டம் கீழே சென்று விட்டது. இதனால் பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை.கடலை செடிகள் இன்னும் இரு வாரங்கள் வளர வேண்டிய நிலையில் தண்ணீர் இல்லாததால் கருகி வருகின்றன. இதனால் கடலை பருப்புகள் எடையில்லாமல் பிஞ்சாக உள்ளன. இதனால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல பயிரிட்ட கத்தரி, வெண்டை, புடலை, பீர்க்கங்காய் உள்ளிட்ட தோட்டப்பயிர்களும் கருகிவிட்டன. மிளகாய் காய்க்கும் பருவத்திலேயே கருகி வருகின்றன.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: இந்த பகுதியில் கடந்த 5 வருடங்களாக போதிய மழை இல்லாததால் ஏற்கனவே நிலத்தடி நீர் குறைந்து காணப்பட்டது. இந்த வருடமும் போதுமான மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை. குறைந்த நேரமே பம்ப்செட்கள் ஓடுகின்றன. கடலை செடிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்காததால் காய்கள் காய்க்கும் நேரத்தில் கருகி வருவதால் எதிர்பார்த்த மகசூல் இல்லை. கடலைப்பருப்பின் எடையும் குறைந்துவிட்டது. எனவே இருப்பதை பிடுங்கி குறைந்த விலைக்கு விற்கிறோம்’ என்றனர்.

Tags :
× RELATED உலக புத்தக தின விழா