உலக தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் பிறந்தநாள் விழா

மதுரை, ஜன. 18: மதுரையில் உலக தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, அவரது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.மதுரையில் உள்ள தமிழ்சங்க கட்டிடத்தில் முதல்முறையாக திருவள்ளுவர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு உலக தமிழ் சங்கம் சார்பில் இயக்குநர் சந்திரா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு சிலைக்கு கீழே பொங்கல் வைத்து, பூஜை செய்தனர். இதனைத்தொடர்ந்து அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. இதில் உலக தமிழ்சங்க பணியாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.இதே சிலையில், தமிழ்புலிகள் கட்சி சார்பில் தலைமை நிலைய செயலாளர் சிறுத்தை செல்வன், மாவட்ட செயலாளர் அழகுப்பாண்டி, தென் மண்டல செயலாளர் தமிழரசு உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பல்வேறு தமிழ் அமைப்பு சார்பில் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

வள்ளுவர் வழிபாடு மன்றம் சார்பில் அதன் தலைவர் அய்யனார் தலைமையில், மன்ற உறுப்பினர்கள் சேர்ந்து மதுரை அண்ணா பஸ்நிலையம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, பொங்கல் வைத்து பூஜை செய்தனர். மதுரையில் உள்ள ஜோதிடர்கள் சங்கம் சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதேபோல் மதுரை அண்ணா பஸ்நிலையம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கும் பல்வேறு அமைப்பினர், தமிழ் ஆர்வலர்கள் மாலை அணிவித்தனர். இப்பகுதியில் பெண்கள் பொங்கல் வைத்தும் வழிபட்டனர்.

தேசிய நூலாக திருக்குறளை அறிவிக்க தீர்மானம்

மதுரையில் திருவள்ளுவர் தினத்தை ஒட்டி நேற்று திருவள்ளுவரின் படத்துக்கு மாணவர்கள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். மதுரை அமுத சுரபி கலைமன்ற தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் கந்தசாமி வரவேற்றார். புலவர் சங்கரலிங்கம், தியாகராஜர் பள்ளி உளளிட்ட பள்ளிகளின் மாணவர்களுக்கு இலவசமாக திருக்குறள் புத்தகம், இனிப்பு வழங்கப்பட்டது. திருக்குறள் சிறப்பு குறித்து புலவர் சங்கரலிங்கம் பேசினார். மன்ற நிர்வாகிகள் தங்கமணி, சிவசங்கரகுமார், சுந்தரேசன், முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில், திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். மாவட்ட தலைநகரங்களில் திருவள்ளுவருக்கு சிலை வைப்பதுடன், மாணவர்களுக்கு அரசு இலவச திருக்குறள் புத்தகம் விநியோகிக்க வேண்டும். மதுரை தமுக்கம் மைதானம் முன்புள்ள தமிழன்னை சிலை அருகே ஆளுயர திருவள்ளுவர் சிலை அமைத்து, கோயில் கட்ட வேண்டும் என்று அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: