கோயில் திருவிழாவில் மோதல் 300க்கும் மேற்பட்டோர் காவல் நிலையம் முற்றுகை திருமங்கலத்தில் பரபரப்பு

திருமங்கலம், ஜன.18:  திருமங்கலம் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 300க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு தாலுகா போலீஸ் ஸ்டேசனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள டி.புதுப்பட்டியில் முனியாண்டி சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் தைபொங்கலையொட்டி நடந்த திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் கலந்து கொண்ட புதுப்பட்டியை அடுத்துள்ள ஏ.தொட்டியபட்டியை சேர்ந்த சிலர் தகராறில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ஊர்பெரியவர்கள் பேசி சமரசம் செய்து வைத்தனர். இந்தநிலையில் நேற்று தொட்டியபட்டியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு டி.புதுப்பட்டி கிராமத்திலுள்ள வீடுகளில் புகுந்து சரமாரியா தாக்கியுள்ளனர். பதிலுக்கு புதுப்பட்டியை சேர்ந்தவர்களும் திருப்பிதாக்கியுள்ளனர். இரண்டு தரப்பினரும் கல்வீசியும் தாக்கிகொண்டனர். மேலும் தொட்டியபட்டியை சேர்ந்த 2 இளைஞர்களை புதுப்பட்டி மக்கள் சிறைபிடித்தனர். தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது இருதரப்பினரும் தப்பியோடிவிட்டனர். பிடிபட்ட இரண்டு பேர்களையும் புதுப்பட்டி பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து மீண்டும் தங்களுக்குள் பிரச்னை உண்டாகும் என கூறி புதுப்பட்டியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட கிராமமக்கள் திரண்டு நேற்று மாலை திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். சுமார் அரைமணிநேரம் நீடித்த முற்றுகையை தொடர்ந்து திருமங்கலம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன், தாலுகா எஸ்ஐ சரவணன் ஆகியோர் கிராமமக்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து முற்றுகையிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். சம்பவம் தொடர்பாக தொட்டியபட்டியை சேர்ந்த 4பேரை பிடித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: