×

பட்டிவீரன்பட்டி அருகே கோட்டை கருப்பணசாமி கோயில் திருவிழா கோலாகலம்

பட்டிவீரன்பட்டி, ஜன. 18: பட்டிவீரன்பட்டி அருகே முத்துலாபுரம் கிராமத்தில் உள்ளது ஆயிரம் அரிவாள்  கோட்டை கருப்பணசாமி கோயில். சுமார் 500 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் 3ம் தேதி திருவிழா கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று இங்கு திருவிழா வெகுவிமரிசையாக நடத்தப்பட்டது. பக்தர்கள் தங்கள் குறைகளை தீர்க்க வேண்டி கருப்பண சுவாமியிடம் வேண்டி கொள்கின்றனர். இவ்வாறு கோரிக்கைள் நிறைவேறினால் சுவாமிக்கு காணிக்கையாக அரிவாள்களை செலுத்துகின்றனர். இந்த அரிவாள்களை பாலசுப்பிரமணி, தங்கவேல், முருகேசன், கருப்பையா, சிங்கராசு ஆகிய 5 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பரம்பரையாக செய்து வருகின்றனர். அரிவாள் தயாரிக்கும் பணிகளை முறையாக விரதமிருந்து மார்கழி மாதம் 1ம் தேதி துவங்கி தை மாதம் 2ம் தேதி முடிக்கப்பட்டது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட அரிவாள்களுக்கு நேற்று காலை வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்வர். தொடர்ந்து சுவாமிக்கு பட்டாடை ஊர்வலமாக எடுத்து சென்று அணிவிக்கப்பட்டது. பின்னர் மேளதாளம் முழங்க ஆயிரக்கணக்கான அரிவாள்களை சாமியாடிகள், கோயில் பூசாரிகள், விரதமிருந்த பக்தர்கள் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்தனர்.தொடர்ந்து அரிவாள்கள் கோயிலின் மேற்புறத்தில் அடுக்கி வைக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். பின்னர் கிடா வெட்டு, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர், ஊர்மக்கள் செய்திருந்தனர்.

இதுகுறித்து அரிவாளர்கள் செய்து தரும் பணியில் ஈடுபடும் குடும்பத்தினர் கூறுகையில், ‘‘கருப்பண சுவாமிக்கு காணிக்கை செலுத்த சுமார் 2 அடி முதல் 21 அடி வரை அரிவாள்கள் செய்யப்படுகின்றன. பல்வேறு வடிவங்களில் அரிவாள்கள் செய்யப்படும். குறிப்பாக ஒரே பிடியில் 2 முதல் 20 அரிவாள்கள் இருக்குமாறும், அரிவாள்களில் மணி இருக்குமாறும் செய்யப்படுகின்றன. இரும்பு, மர பிடியிலும் அரிவாள்கள் செய்துள்ளோம். அரிவாள்களில் காணிக்கை செலுத்துபவர்களின் பெயர்களும் பொறிக்கப்படும். ஒரு சில பக்தர்கள் தங்கத்திலான அரிவாள்களையும் காணிக்கையாக செலுத்துகின்றனர்.பரம்பரை பூசாரி ராமசாமி கூறுகையில், ‘‘கடந்தாண்டு 1200 அரிவாள்களுக்கு மேல் காணிக்கையாக வந்தது. இந்தாண்டு பக்தர்கள் வருகை அதிகரிப்பால் 1300க்கும் மேற்பட்ட அரிவாள்கள் வந்தன’’ என்றார்.



Tags : temple ,
× RELATED சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு லிப்ட்...