×

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 3 அடியாக சரிவு தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றம்

நாகர்கோவில், ஜன.18: பேச்சிப்பாறை அணை பராமரிப்பு பணிகளுக்காக தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் நீர்மட்டம் 3 அடியாக சரிந்துள்ளது.குமரி மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றாக பேச்சிப்பாறை அணை விளங்கி வருகிறது. பெருஞ்சாணி, சிற்றார்-1, சிற்றார்-2, பொய்கை மற்றும் மாம்பழத்துறையாறு ஆகிய அணைகள் பாசனத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் கன்னிப்பூ மற்றும் கும்பப்பூ ஆகிய இருபோக சாகுபடி பணிகளும் பேச்சிப்பாறை அணையை நம்பியே இருந்து வருகிறது.மாவட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டு ஓகி புயலின்போது பெய்த பலத்த மழை காரணமாக அணை நீர்மட்டம் உச்ச நீர்மட்டத்தை எட்டியிருந்தது. 48 அடி உச்சநீர்மட்ட அளவை கொண்ட பேச்சிப்பாறை அணையில் 46 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டிருந்தது. பின்னர் அணை பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டன. இதற்காக அணையில் இருந்து பெருமளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.இதனால் அணையின் நீர்மட்டம் கணிசமாக குறைந்து வந்தது. இதனைத் தொடர்ந்து அணை பராமரிப்பு பணிகளும் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் மழை பெய்ததால் அணையில் நீர்மட்டம் 35 அடி வரை உயர்ந்தது. இதனால் அணை பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டன. தொடர்ந்து அணையில் இருந்து தண்ணீர் கணிசமாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 3.40 அடியாக இருந்தது. அணைக்கு 108 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தநிலையில் 273 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 66.55 அடியாகும். அணைக்கு 85 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. 620 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சிற்றார்-1ல் 13.81 அடியும், சிற்றார்-2ல் 13.90 அடியும் நீர்மட்டம் காணப்படுகிறது. பொய்கையில் 13.50 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 50.94 அடியும் நீர்மட்டம் உள்ளது. ஜூன் 1ம் தேதி குமரி மாவட்டத்தில் பாசனத்திற்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதனால் அணை பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்ைக எழுந்துள்ளது.

₹61 கோடியில் சீரமைப்பு பணிகள்
பேச்சிப்பாறை அணையை உலக வங்கி நிதியுதவியுடன் ₹61 கோடி செலவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.  மறுகால் பகுதி அருகே உள்ள மேடான  பகுதியில் மண் அகற்றப்பட்டு 100 மீட்டர் நீளத்திற்கு 8 மறுகால் மதகுகள் புதிதாக அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர சைரன், எலக்ட்ரிக்கல் பணி, சாலை அமைப்பு, குடியிருப்புகள் புதுப்பிப்பு நடந்து வருகிறது.  மழை காலத்துக்கு முன்பே இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டபோதிலும் பணிகள் தற்போதும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. பேச்சிப்பாறை அணையின் அடித்தள பகுதி கடினமான பாறை ஆகும். இதனை வெட்டி அப்புறப்படுத்திவிட்டு அந்த பகுதியில் காங்கிரிட் போட்டு நிரப்புகின்றனர்.




Tags : Pichippuram Dam ,
× RELATED ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி