×

பார்வதிபுரத்தில் 8வது முறையாக கைவரிசை டாஸ்மாக் கடை சுவரை உடைத்து கொள்ளை ₹24 ஆயிரம் மதுபாட்டில்களை அள்ளிச்சென்றனர்

நாகர்கோவில், ஜன. 18: நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே டாஸ்மாக் கடை சுவற்றில் துளையிட்டு ₹24 ஆயிரம் மதிப்பிலான டாஸ்மாக் மது வகைகளை எடுத்துச்சென்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.  குமரி மாவட்டத்தில் 92 டாஸ்மாக் கடைகள் உள்ளன. பல கடைகள் பிரச்னைக்குரிய இடங்களில் செயல்படுகின்றன. மேலும் சில கடைகள் பள்ளி, கல்லூரி அருகே உள்ளன. அவைகளை மாற்ற கோரி பொதுமக்கள் அவ்வப்போது போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். நாகர்கோவில் பார்வதிபுரம் நாடான்குளம் அருகே 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் மேற்கு பகுதியில் உள்ள கடையில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன.  இதுவரை 8 முறை இந்த கடையின் சுவரை துளையிட்டு திருட்டும், திருட்டு முயற்சியும் நடந்துள்ளன. இதில், 3 முறை கொள்ளையர்கள் கடையில் இருந்து மதுபாட்டில்களை எடுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக வடசேரி போலீசில் புகார் கொடுக்கப்பட்டு வழக்குபதிவு செய்து டாஸ்மாக் திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். கொள்ளையர்கள் டாஸ்மாக் கடையின் வடக்கு பக்க சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.  இதையடுத்து அந்த சுவரில் துளையிட முயற்சித்தால் காவல் நிலையம் மற்றும் கடை விற்பனையாளருக்கு மெசேஜ் செல்லும் வகையில் சென்சார் கருவி பொருத்தப்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக இந்த கடையில் திருட்டு நடக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் திருவள்ளுவர் தினத்தையொட்டி மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

 நேற்று காலை ஊழியர்கள் கடையை திறக்க சென்றபோது கடையின் மேற்கு பக்க சுவரில் துளையிடப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது மதுபாட்டில்கள் திருடப்பட்டு இருந்தது. இது குறித்து வடசேரி போலீசுக்கு டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் கோட்டாரை சேர்ந்த கணேசன் தகவல் தெரிவித்தார். ஏஎஸ்பி ஜவகர், வடசேரி இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர், சப் இன்ஸ்பெக்டர் அனில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.
 விசாரணையில், கொள்ளையர்கள் டாஸ்மாக் கடை அருகே உள்ள கட்டிடத்தில் இருந்த பிளாஸ்டிக் சேரை எடுத்துவந்து டாஸ்மாக் கடையின் மேற்கு பகுதி சுவற்றின் ஓரம் வைத்து அதில் நின்று சுவரை துளையிட்டு உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த விலை உயர்ந்த 63 மது பாட்டில்களை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். இதன் மதிப்பு ₹23 ஆயிரத்து 910 ஆகும். இது குறித்து வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பழைய குற்றவாளிகளுக்கு தொடர்பு?
இந்த டாஸ்மாக் கடையில் தொடர் திருட்டு நடந்து வருகிறது. கடந்த சில  மாதங்களுக்கு முன்பு இந்த கடையில் திருட்டு நடந்தபோது 2 பேரை போலீசார் கைது  செய்தனர். அதில் ஒருவர் தற்போது வெளியே உள்ளார். சென்சார் மேற்கு பகுதியில் உள்ள  சுவற்றில் வைக்கவில்லை என்பதை அறிந்தவர்  தான் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளார்.  இதனால் பழைய திருட்டு சம்பவத்தில் சிக்கியவர்களுக்கு இந்த திருட்டில்  தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதனால் பழைய குற்றவாளிகளை  பிடித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் புதிய  நபர்களுக்கு இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்ற அடிப்படையிலும்  விசாரணை நடந்து வருகிறது.

மது அருந்திய கொள்ளையர்கள்
டாஸ்மாக் கடையின் உள்ளே புகுந்து மது பாட்டில்களை திருடிய கொள்ளையர்கள்,  வெளியே வரும்போது அவர்களிடம் இருந்து ஒரு பீர் பாட்டில், இரண்டு மது  பாட்டில்கள் தவறி கீழே விழுந்துள்ளது. அதனை போலீசார் கைப்பற்றி கைரேகை  சோதனைக்கு அனுப்பி வைத்தனர். மற்ற மதுபாட்டில்களுடன் வெளியே வந்த  கொள்ளையர்கள், டாஸ்மாக்கையொட்டி உள்ள கால்வாய் அருகே அமர்ந்து மது  அருந்திவிட்டு சென்றுள்ளனர். அதில் ஒருவன் தனது காலணியை அங்கேயே  போட்டுவிட்டு சென்றுள்ளான்.

கடையை அகற்ற வேண்டும்
தொடர் திருட்டு நடந்து வரும் இந்த டாஸ்மாக் கடையில் கண்காணிப்பு ேகமரா  பொருத்த போலீசார் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் டாஸ்மாக் நிர்வாகம்  கண்டுகொள்ளவில்லை. மேலும் மேற்கு பகுதியில் உள்ள சுவற்றில் சென்சார்  கருவியும் பொருத்துமாறு கூறிவந்துள்ளனர். அதனையும் டாஸ்மாக் நிர்வாகம்  கண்டுகொள்ளவில்லை. இதனால் கொள்ளையர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் இருந்து  வருகிறது. 9வது முறையாக இந்த டாஸ்மாக் கடையில் திருட்டு நடந்து இருப்பதால்  இந்த கடையை அங்கிருந்து மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சுவரில் சென்சார் கருவி
கொள்ளை  நடந்த டாஸ்மாக் கடையை சுற்றி வீடுகள் இல்ைல. இது கொள்ளையர்களுக்கு வசதியாக  அமைந்துள்ளது. டாஸ்மாக் கடையின் வடக்கு பகுதியில் உள்ள சுவரை துளைத்துதான்  வழக்கமாக திருடியுள்ளனர். இதனை தொடர்ந்து அந்த சுவற்றில் சென்சார் கருவி  பொருத்தப்பட்டது. இதனால், இந்த சுவற்றை ஓங்கி இடிக்கும்போது அந்த சென்சார்  கருவி மூலம் நேரடியாக வடசேரி இன்ஸ்பெக்டர் மற்றும் டாஸ்மாக் கடை  ஊழியர்களுக்கு டாஸ்மாக் கடையின் நம்பரை சொல்லி கடையில் கொள்ளை முயற்சி  நடக்கிறது என வாய்ஸ்கால் மூலம் தகவல் செல்லும். கடந்த சில மாதங்களுக்கு  முன்பு டாஸ்மாக் கடையின் சுவற்றில் துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் கடையில் இருந்து 240 மது பாட்டில்களை எடுத்து கடையின் முன்பு வைத்துள்ளனர்.  அதற்குள் போலீசார் அங்கு வந்தனர். இதனை பார்த்த கொள்ளையர்கள் அந்த  மதுபாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச்சென்றனர்.

Tags : Parvatipuram Kavarizai Taskmak ,
× RELATED விஜய்வசந்த், பொன்.ராதாகிருஷ்ணன்,...