விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வருஷாபிஷேக விழா

விளாத்திகுளம், ஜன.18: விளாத்திகுளம் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வருஷாபிஷேகத்தையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடந்தது.

தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் கோயில் கல் மண்டபத்தில் காலை 6.30 மணிக்கு மகாகணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, பூர்ணாகுதி, யாகசாலை பூஜைகள் தீபாராதனைகள் நடந்தது. காலை 10 மணியளவில் யாக சாலையிலிருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோயில் பிரகாரம் வழியாக வலம் வந்து சுவாமி, அம்பாள், விநாயகர், சண்முகர் விமான கலசங்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மூலவர் சுவாமி அம்பாள், சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் புனித நீரால் கும்ப அபிஷேகம் தீபாராதனைகள் நடந்தது.சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் மலர் சாத்தி அலங்கார தீபாராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணியளவில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் திருவீதி உலாவும், பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா புறப்பாடும், கோயில் வளாகத்தில் ஆன்மீக சிறப்பு சொற்பொழிவும் நடந்தது. ஏற்பாடுகளை திருப்பணிக்குழு நிர்வாகிகள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

Related Stories: