×

திருவண்ணாமலை மாவட்டத்தில் 389 அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவி பொருத்தம் அதிகாரிகள் தகவல்

திருவண்ணாமலை, ஜன.18: திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து கல்வித்துறை அலுவலகங்கள் மற்றும் 389 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உட்பட அனைத்து கல்வித்துறை அலுவலகங்களுக்கும் பயோமெட்ரிக் கருவி ஜனவரி 12ம் தேதிக்குள் பொருத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டிருந்தார்.அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா 2 பயோமெட்ரிக் கருவிகளும், தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள், 120 மாவட்ட கல்வி அலுவலகங்கள், 413 வட்டார கல்வி அலுவலகங்கள் மற்றும் வட்டார வளமையங்களுக்கு தலா ஒரு பயோமெட்ரிக் கருவிகள் வழங்கப்பட்டிருந்தது. இந்த கருவிகள் அனைத்தும் பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களில் பொருத்தப்பட்டது.

அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 389 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தலா 2 பயோமெட்ரிக் கருவிகளும், முதன்மைக் கல்வி அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள், வட்டார வளமையங்கள் என மொத்தம் 820 பயோமெட்ரிக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.இந்த பயோமெட்ரிக் கருவிகள் முதலில் சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டு, அதன்பின்னர் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : government schools ,Thiruvannamalai district ,
× RELATED பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வி...