காணும் பொங்கல் விடுமுறையான நேற்று சாத்தனூர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

* சிறப்பு பஸ்கள் இயக்கம் * போலீஸ் கண்காணிப்பு தீவிரம்

திருவண்ணாமலை, ஜன.15: காணும் பொங்கல் விடுமுறையான நேற்று, சாத்தனூர் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில், ஜவ்வாதுமலையும், சாத்தனூர் அணையும் பொதுமக்களின் மனம் கவர்ந்த சுற்றுலா தலமாக அமைந்திருக்கிறது. இந்த ஆண்டு சாத்தனூர் அணை முழுமையாக நிரம்பவில்லை. அணையில் தற்போது மொத்தமுள்ள 119 அடியில், 96 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. ஆனாலும், இங்குள்ள அழகிய பூங்காக்கள், நீச்சல் குளம், மிகப்பெரிய முதலைப்பண்ணை, குழந்தைகளுக்கான விளையாட்டு வசதி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களை காண பொதுமக்கள் வருகை அதிகம் இருக்கும்.இந்நிலையில், பொங்கல் பண்டிகையை விடுமுறையை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக சாத்தனூர் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. காணும் பொங்கலான நேற்று, சுற்றுலா பயணிகள் குடும்ப குடும்பாக வந்திருந்தனர். அங்குள்ள பூங்கா, நீச்சல்குளம், முதலைப் பண்ணைகளை குழந்தைகள் ஆர்வத்துடன் சுற்றிப்பார்த்தனர்.

மேலும், திருவண்ணாமலை, செங்கம், போளூர், ஆரணி ஆகிய நகரங்களில் இருந்து சாத்தனூர் அணைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் மதுபாட்டில்கள் கொண்டு வருவதை தடுக்க நுழைவு வாயிலில் அருகே போலீசார் சோதனை சாவடி அமைத்து இருந்தனர்.அதேபோல், வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்திய பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டது. மேலும், சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்களை கண்காணிக்க, சீருடை அணியாத போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


× RELATED திருச்சுழி அருகே காளியம்மனுக்கு பொங்கல் விழா