×

வேலூர் மாவட்டத்தில் கீழ்முட்டுக்கூர் உட்பட 3 இடங்களில் மாடு விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் 60க்கும் மேற்பட்டவர்கள் காயம்

வேலூர், ஜன.18: வேலூர் மாவட்டத்தில் மூஞ்சூர்பட்டு, கீழ்முட்டுக்கூர், புலிமேடு கிராமங்களில் நடந்த மாடு விடும் விழாவில் 300க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன. இவ்விழாக்களில் மாடுகள் முட்டி 60க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.தமிழகத்தில் பொங்கல் திருநாளை தொடர்ந்து ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, காளை விடும் விழா என்று வீரவிளையாட்டுகள் களை கட்டும். இதில் தமிழகத்தின் வடமாவட்டங்களில் காளை விடும் விழா நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் வேலூர் மாவட்டத்தில் பனமடங்கி, சிவநாதபுரம், அணைக்கட்டு ஆகிய இடங்களில் காளை விடும் விழா நடந்தது. நேற்று காட்பாடி அடுத்த கீழ்முட்டுக்கூர், ஊசூர் அடுத்த புலிமேடு, வேலூர் அடுத்த மூஞ்சூர்பட்டு கிராமங்களில் காளை விடும் விழா நடந்தது.

மூஞ்சூர்பட்டு கிராமத்தில் நடந்த மாடு விடும் விழாவில் 60 காளைகள் பங்கேற்றன. தாசில்தார் ரமேஷ் தலைமையில் வருவாய்த்துறையினர் விழாவை கண்காணித்தனர். காட்பாடி அடுத்த கீழ்முட்டுக்கூரில் நடந்த காளை விடும் விழா தாசில்தார் சதீஷ்குமார் தலைமையில் முன்னிலையில் நடந்தது. இவ்விழாவில் பல்வேறு இடங்களில் இருந்து வந்த 150 காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்தன. வெற்றிபெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக ₹1 லட்சமும். 2ம் பரிசாக ₹75 ஆயிரமும், 3ம் பரிசாக ₹65 ஆயிரமும், 4ம் பரிசாக ₹55 ஆயிரமும், ஆறுதல் பரிசாக 36 காளைகளுக்கு ஆறுதல் பரிசாக ₹2,500 என ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.இவ்விழாவில் மாடுகள் முட்டியதில் 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். 10 பேர் படுகாயங்களுடன் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். குடியாத்தம் டிஎஸ்பி பிரகாஷ்பாபு தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் புகழ், மனோன்மணி, கவிதா மற்றும் அதிரடிப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அணைக்கட்டு: அணைக்கட்டு தாலுகா புலிமேடு கிராமத்தில் நடந்த காளைவிடும் விழாவை சப்-கலெக்டர் மெகராஜ், கலால் உதவி ஆணையர் பூங்கொடி தாசில்தார் ஹெலன்ராணி, மண்டல துணை தாசில்தார் பன்னீர்செல்வம் முன்னிலையில் விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து 59 காளைகள் பங்கேற்றன.டிஎஸ்பி கோபாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவில் காளைகள் முட்டி 15 பேர் காயமடைந்தனர்.

Tags : cattle farewell ceremony ,Vellore district ,
× RELATED திருப்பத்தூரில் காலாவதியான குளிர்பானங்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்