×

சென்னை அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் சிறுமி உள்ளிட்ட சாட்சிகளிடம் இன்று முதல் குறுக்கு விசாரணை

சென்னை, ஜன. 18: அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் சிறுமி உள்ளிட்ட 4 சாட்சிகளிடம் இன்று முதல் குறுக்கு விசாரணை நடைபெற உள்ளது.சென்னை, அயனாவரம் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் 11 வயது சிறுமி ஒருவரை அதே குடியிருப்பில் வேலை செய்து வந்த லிப்ட் ஆபரேட்டர், வாட்டர் மேன், வாட்ச் மேன் உள்ளிட்ட பலர் பல  மாதங்களாக மயக்க மருந்து உள்ளிட்ட போதைப் மருந்துகளை கொடுத்து பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, விசாரணை நடத்திய போலீசார் சம்பவத்தில் ஈடுபட்டதாக 60 வயது முதியவர் உள்பட 17 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இவர்களுக்கு பலர்  எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்தனர்.

இவர்கள் மீதான வழக்கு விசாரணை சென்னையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு என்பதால் விசாரணையை  தினம்தோறும் நடத்தி விரைவில் தீர்ப்பு வழங்க நீதிபதி  முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் 17 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அனைவரும் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி மனு தாக்கல் செய்தனர். ஆனால், மனுவை விசாரித்த நீதிபதி ஜாமீன்  தர மறுப்பு தெரிவித்தார்.  தற்போது அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, 17 பேர் மீதும் கடந்த வாரம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமி, மாஜிஸ்திரேட், டாக்டர்கள் உள்ளிட்ட 81 சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்காக சம்மன் கடந்த வாரம்  அனுப்பப்பட்டது. அதன்படி, இன்று முதல் சிறுமி மற்றும் வழக்கின் முதல் 4 சாட்சிகளிடம் விசாரணையை குற்றவாளிகளின் தரப்பு வக்கீல்கள் நடத்த உள்ளனர். இன்று சாட்சி விசாரணை தொடங்குவதால் நீதிமன்ற வட்டாரங்களில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. விசாரணை முடிந்ததும் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும், அதில் யார் குற்றவாளிகள் என்பது தெரியவரும். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 17 பேர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை சென்னை  உயர் நீதிமன்றம் கடந்த வாரம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.



Tags : cross-examination ,witnesses ,Chennai Ayanavaram ,
× RELATED குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு