×

ஆவடி மின்வாரிய கோட்டத்தில் சேதமடைந்த நிலையில் மின்கம்பங்கள்

ஆவடி, ஜன. 18: ஆவடி மின்வாரிய கோட்டத்தில், சேதமடைந்த நிலையில் மின்கம்பங்கள் உள்ளதால், சாலையில் அச்சத்துடன் மக்கள் சென்று வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை  எடுக்காமல் அலட்சியமாக உள்ளதாக மக்கள் சரமாரியாக குற்றம்சாட்டுகின்றனர். ஆவடி மின்வாரிய கோட்டத்தில் ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், அண்ணனூர், முத்தாபுதுப்பேட்டை, மிட்டினமல்லி, கோயில்பதாகை, பாண்டேஸ்வரம், செங்குன்றம், புழல், சோழவரம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.  மேற்கண்ட பகுதியில் சுமார் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இப்பகுதி குடியிருப்புகளுக்கு மின்கம்பங்கள் வழியாக, துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது. ஆரம்ப காலங்களில் இரும்பு கம்பங்கள் வழியாக மின் விநியோகம் செய்யப்பட்டது. பின்னர், இந்த  கம்பங்கள் அடிப்பகுதி துருபிடித்து கீழே விழும்  நிலை ஏற்பட்டது.

மழைக்காலங்களில் இரும்பு கம்பங்களில் மின்கசிவு ஏற்பட்டு கால்நடை, மனித உயிர் பலி சம்பவங்கள் நடைபெற்றது. இதையடுத்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலான இரும்பு மின்கம்பங்கள் கான்கிரீட் கம்பங்களாக  மாற்றப்பட்டது. தற்போது இந்த கம்பங்கள் பல இடங்களில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து உள்ளே இருக்கும் இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் பலத்த காற்று அடித்தால் மின்கம்பம் பலவும் கீழே விழும் நிலையில் உள்ளன.  இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘கடந்த 2016ம் ஆண்டு வர்தா புயலின் போது நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் கீழே விழுந்தன. இதனால் பல நாட்களாக மக்கள் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டனர். அப்போது  உடைந்த கம்பங்களில் சிலவற்றை சீரமைத்தனர். ஆனால், இன்னும் மோசமான நிலையில் பல மின் கம்பங்கள் உள்ளன. அவைகளை சீரமைக்காமல் இருப்பதால் சிறிய காற்று அடித்தாலும் சாயும் அபாயம் நிலவுகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பலமுறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் கூறி வருகின்றனர். ஆனாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே இனியாவது சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் கவனித்து சேதம் அடைந்த  மின்கம்பங்களை உடனே மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags :
× RELATED ரூ.97 ஆயிரம் பறிமுதல்