ஜிஐஎஸ் முறையில் குடிநீர் இணைப்புகளின் வரைபடம் தயாரிக்க முடிவு: வாரியத்திற்கு மாநகராட்சி உதவி

சென்னை: சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களும், 200 வார்டுகளும் உள்ளன. இந்தப் பகுதியில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளும், பல்வேறு வணிக நிறுவனங்களும் உள்ளன. இந்த வீடுகள் மற்றும் வணிக  நிறுவனங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பணியை சென்னை குடிநீர் மற்றும் வடிகால்  வாரியம் செய்து வருகிறது. மேலும் சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகால்களை பராமரிப்பு பணியையும் வாரியம் செய்து வருகிறது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் லாரிகள் மூலம்தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் பூமிக்கு அடியில் உள்ள குடிநீர் இணைப்புகள், குடிநீர் வால்வுகள், நீர் தேக்க தொட்டிகள், குடிநீர் குழாய்கள், நீர் நிலையங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வரைபடத்தை தயார் செய்ய குடிநீர் வாரியம்  முடிவுசெய்துள்ளது. இந்த வரை படம் புவிசார் குறியீடு மூலம் ஜியோ டேகிங் முறையில் தயார் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை  கூட்டம் கடந்த வாரம் நடந்தது.  சென்னை மாநகராட்சியில் தெருவிளக்குள், மழைநீர் வடிகால்கள், மரங்கள் ஆகியவற்றை கண்காணிக்க ஜிஐஎஸ் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இதுதொடர்பான தகவல்களை  சென்னை மாநகராட்சி குடிநீர் வாரியத்திற்கு அளிக்கும். இதனை வைத்து குடிநீர் வாரிய அதிகாரிகள் புதிய இணையதளத்தை தயார் செய்வார்கள். அதில் குடிநீர் இணைப்பு தொடர்பான அனைத்து தகவல்களும் இருக்கும். அதில்  ஒரு குறிப்பிட்ட இடத்தை க்ளிக் செய்தால் அந்த இடத்தின் புகைப்படம், அங்கு இருக்கும் குடிநீர் இணைப்புகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் அறிய முடியும்.

Related Stories: