காணும் பொங்கல் கொண்டாட்டம் மாட்டு வண்டி பந்தயத்துக்கு போலீசார் அனுமதி மறுப்பு: தொழிலாளர்கள் கடும் அதிருப்தி

சென்னை: புழல் கால்பந்து விளையாட்டு திடல் அருகில், போலீசாரின் தடையை மீறி மாட்டு வண்டி போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால், புழல் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டதை  அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை புழல் பகுதியில் மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்படும் என மாட்டுவண்டி தொழிலாளர்கள் நேற்று அறிவித்திருந்தனர். ஆனால் இந்த போட்டிக்கு சென்னை மாநகர காவல்துறை அனுமதி  அளிக்கவில்லை என கூறப்படுகிறது. ஆனாலும், புழல் கால்பந்து விளையாட்டு திடல் அருகே நேற்று காலை 10 மணியளவில் 6 மாட்டு வண்டிகள் பந்தயத்தில் கலந்துகொள்வதற்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. இதை  பார்க்க ஏராளமான மக்களும் கூடினர்.தகவலறிந்து புழல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ‘‘மாட்டு வண்டி பந்தயம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, இங்கு பந்தயம் நடத்தக்கூடாது’’ என மாட்டு வண்டி தொழிலாளர்களை  போலீசார் எச்சரித்தனர்.

 எனினும், பந்தயத்தை காண வந்தவர்களும் போட்டியாளர்களும் அங்கிருந்து செல்லவில்லை. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. நீண்ட நேரத்துக்கு பிறகு மாட்டு வண்டி தொழிலாளர்கள் அதிருப்தியுடன் கலைந்து  சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு இருந்தனர்.இதுகுறித்து மாட்டு வண்டி தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘பொங்கலை ஒட்டி மாட்டு வண்டி பந்தயம் நடத்த வேண்டும் என்று மனு கொடுத்தோம். எங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி  வழங்கும்போது மாட்டு வண்டி பந்தயத்துக்கு அனுமதி வழங்குவதில் என்ன பிரச்னை என்று தெரியவில்லை. இந்த ஆண்டு இல்லாவிட்டாலும் அடுத்த ஆண்டாவது எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்’’ என்றனர்.  

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அடுத்த ராமசமுத்திரம் ஊராட்சி விஜிஆர் கண்டிகை கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் கடந்த 7ம் தேதி கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் தங்கள் சுற்றுவட்டார பகுதியில் 150 காளைகள்  ஜல்லிக்கட்டுக்காக தயார் செய்யப்பட்டு இருப்பதாகவும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க மறுத்துவிட்டது. எனவே, காணும் பொங்கல் அன்று விஜிஆர் கண்டிகை பகுதியில் விதிகளை மீறி ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால்  வேறுவழியின்றி விஜிஆர் கண்டிகை இளைஞர்கள் ஜல்லிக்கட்டு நடத்த இருந்த இடத்தில் 10க்கும் மேற்பட்ட மாடுகளை அலங்கரித்து, கோ மாதா பூஜை செய்துவிட்டு அதிருப்தியுடன் ஊர்வலமாக அழைத்துச்சென்றனர்.

Related Stories: