ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி-20 போட்டி இந்தியாவில் விளையாட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது

ஓமலூர், ஜன.11: இந்தியாவில் அனைத்து விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் தரப்படுவதாக, கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் தெரிவித்தார்.

 சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஜூனியர் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில், வெற்றி பெற்ற சேலம் நீலாம்பாள் சுப்பிரமணியம் பள்ளி அணிக்கு, இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் கோப்பையை வழங்கி வாழ்த்தினார்.  சேலம் பெரியார் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் பள்ளி மாணவர்களை ஊக்கபடுத்தும் வகையில், ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி-20 போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுக்க பல்வேறு இடங்களில் நடைபெறும் இப்போட்டியானது பெரியார் பல்கலைக்கழக வளாகத்திலும் நடக்கிறது. சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. இறுதி போட்டியில் சேலம் நீலாம்பாள் பள்ளியும், நாமக்கல் அரசு பள்ளி அணியும் மோதியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நாமக்கல் அரசு பள்ளி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழந்து 129 ரன்கள் எடுத்தது.

 இதனை தொடர்ந்து களமிறங்கிய சேலம் நீலாம்பாள் சுப்ரமணியம் பள்ளி அணி 17வது ஓவரின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 130 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ரிசளிப்பு விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் கலந்து கொண்டு பேசினார். அப்போது, இந்தியாவில் அனைத்து விளையாட்டுகளுக்கும் தற்போது முக்கியத்துவம் பெற்று வருகிறது. பிற விளையாட்டுகள் இளைஞர்கள் மத்தியில் செல்லாததற்கு கிரிக்கெட் காரணமல்ல. கிரிக்கெட் பட்டி, தொட்டியெங்கும் சென்றுள்ளது. திறமை வாய்ந்த அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்திய அணி முழுமையான திறமையுடன் உள்ளது. அனைத்து போட்டிகளிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்றது மிகப்பெரிய சாதனையாகும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்க துணைத்தலைவரும், ஓமலூர் எம்எல்ஏவுமான வெற்றிவேல் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கும், இரண்டாமிடம் பிடித்த அணிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Related Stories: