ஓராண்டாகியும் உயர் மின் விளக்கு எரியாததால் மக்கள் கடும் அவதி

வாழப்பாடி.ஜன.11: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சின்னம்மநாயக்கன்பாளையம் ஊராட்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர், இந்த ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது, மேலும் இவ்வழியாக நூற்றுக்கணக்கான மாணவர்கள் சென்று வருகின்றனர். இங்குள்ள ஆதிதிராவிடர் தெரு பகுதியில் உயர்மின் கோபுர கம்பம் அமைக்கப்பட்டது. கடந்த ஓராண்டாக ஒரு பல்பு கூட எரியாமல் அப்பகுதி இருளாகவே காட்சி அளிக்கிறது. மேலும் இப்பகுதியில் காடுகள் சூழ்ந்த பகுதியாக உள்ளதால் விஷ ஜந்துகள் அதிக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் மக்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படும் வகையில் இருட்டாக உள்ளதால் மக்கள் நலன் கருதி  பல முறை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  உடனடியாக மின் விளக்கு எரிய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து ஊராட்சி செயலாளர் (பொ) மகேஸ்வரன் கூறுகையில், தனியார் நிறுவனம் மூலமாக நிறுவப்பட்டதால் அவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளோம்.  இதே போல ஊராட்சியில் 9 உயர் மின் கோபுர விளக்குகள் உள்ளது. அனைத்தும் எரியாமல் தான் உள்ளது.  எங்களுக்கு தெருவிளக்கிற்கு மட்டும் ₹299 வீதம் செலவு செய்ய அனுமதி வரம்பு இருப்பதால், எங்களால் செய்ய இயலாததை சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்கு தகவல் கொடுக்கிறோம். தெருவிளக்கை பொறுத்தமட்டில் 100 சதவீதம் முழுமையாக எரிகிறது, என்றார்.

Related Stories: