பொங்கல் தொகுப்பு வழங்காததை கண்டித்து மறியல் வட்ட வழங்கல் அலுவலர் சமரசம்

ஓமலூர், ஜன.11: ஓமலூரில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ₹1000, வேட்டி, சேலை வழங்காததை கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி தாலுகாவில், ஒரு லட்சத்து 65 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வறுமைகோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு மட்டும் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியது. இதனால், தங்களுக்கு பணம் கிடைக்காதோ என்று பயந்துபோன மக்கள் நள்ளிரவு வரை காத்திருத்து பொங்கல் தொகுப்பை வாங்கி சென்றனர். நேற்று அதிகாலை முதலே ரேசன்கடை முன்பாக மக்கள் காத்திருந்தனர். ஆனால், பெரும்பாலான கடைகளுக்கு ₹1000 வழங்குவதற்குரிய தொகை வராததால் ரேஷன் விற்பனையாளர்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.

 இதனால் கடை முன்பாக காத்திருந்த மக்களிடம் மதியத்திற்கு பின் வழங்கப்படும் என்றனர். பணம், பொருட்கள் கொடுக்காமலும், கடையை திறக்காததாலும் ஆத்திரமடைந்த மக்கள் ஓமலூர் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு அதிகாரிகள் மக்களை சந்திக்காததால் விரக்தியில் இருந்த மக்கள் தாலுகா அலுவலகம் முன்பாக சேலம்-மேட்டூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்ட தகவல் அறிந்து வந்த போலீசார் மக்களை சமாதானப்படுத்தினர்.

 ஆனால், தங்களுக்கு பொங்கல் பரிசு, வேட்டி, சேலை மற்றும் ரொக்கம் ஆயிரம் வழங்கினால் மட்டுமே இங்கிருந்து கலைந்து செல்வோம் என மக்கள் பிடிவாதமாக கூறினர். சம்பவ இடத்துக்கு வந்த ஓமலூர் வட்ட வழங்கல் அலுவலர் அருள்பிரகாஷ் மக்களை சமரசப்படுத்தினார். காலையில் பணம் இல்லாததால் வழங்க முடியவில்லை. தற்போது அலுவலர்கள் சேலத்திற்கு சென்று பணம் வாங்கிக்கொண்டு வருகின்றனர். வந்தவுடன் அனைவருக்கும் வழங்கப்படும். அனைவரும் கடைக்கு செல்லுமாறு தெரிவித்தார். அதைதொடர்ந்தே மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: