திருச்செங்கோடு வட்டாரத்தில் கரும்பில் அசுவினி தாக்குதல் அதிகரிப்பு

திருச்செங்கோடு,  ஜன.11: திருச்செங்கோடு வட்டாரத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள கருப்பில்,  அசுவினி தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால்  விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திருச்செங்கோடு  கொல்லப்பட்டி, இறையமங்கலம், பட்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள்  நூற்றுக்கணக்கான ஏக்கரில் கரும்பு பயிரிட்டுள்ளனர். தற்போது இந்த கரும்பு  அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், அசுவினி பூச்சி  தாக்குதல் அதிகரித்துள்ளது.  இதனால், மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக  விவசாயிகள் கவலை தெரிவித்தனர். நாமக்கல் மாவட்ட கரும்பு ஆராய்ச்சி நிலையம்,  வேளாண் அறிவியல் நிலையம், வேளாண் அறிவியல் விரிவாக்க மையம் மற்றும் கலெக்டர்  அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், இதுகுறித்து பலமுறை  புகார் தெரிவித்தும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், அசுவினி தாக்குதலுக்குள்ளான கரும்பு தோட்டத்தில் ஆய்வு செய்த  வேளாண் அலுவலர்கள், வயல்களில் சாக்கடை தண்ணீர் தேங்கி இருப்பதே, கரும்பில் அசுவினி  பூச்சி தாக்குதலுக்கு காரணம் என தெரிவித்துள்ளனர். எனவே,  வேளாண் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ரசாயன மருந்துகள்  தெளிப்பதை கைவிட்டு, அசுவினி பூச்சியை அழிக்கும் எதிரி உயிரியை வழங்க வேண்டும்  என விவசாயிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

× RELATED ஓசூரில் புதினா விளைச்சல் அதிகரிப்பு