மகளிர் உதவும் சங்கத்தில் சேர முஸ்லிம் பெண்களுக்கு அழைப்பு

கிருஷ்ணகிரி, ஜன.11:   கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சிறுபான்மையினர் முஸ்லிம் சமுதாயத்தை சார்ந்த, கணவரால் கைவிடப்பட்ட மற்றும் வயதான பெண்கள் சுயமாக தொழில் செய்ய, சிறுதொழில் புரிவதற்கு தேவையான பயிற்சிகள் அளித்து, அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்த, கலெக்டர் தலைமையில் “கிருஷ்ணகிரி மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம்” என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. அரசு ஆணைகளின்படி, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கத்தின் கவுரவ செயலர், கவுரவ இணைச் செயலர், உறுப்பினர் என 6 பேர் புதியதாக நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இந்த சங்கத்தில் நிர்வாக குழுவில் உறுப்பினராக சேருவதற்கு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிக்கும் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். சமூக பணிகளில் எவ்வித புகார்களுக்கும் இடமின்றி, மிக்க ஆர்வத்துடன் செயல்படுபவர்களாக இருத்தல் வேண்டும். அவர்கள் மீது எவ்வித குற்றவியல் நடவடிக்கைகளோ, நீதிமன்ற குற்றவியல் வழக்குகளோ நிலுவையில் இருத்தல் கூடாது. இத்தகுதிகளுடைய சிறுபான்மையின முஸ்லிம் சமுதாயத்தை சார்ந்தவர்கள், தங்களது சுய விவரத்துடன் விண்ணப்பத்தை வருகிற 21ம் தேதிக்குள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

× RELATED சர்வதேச விசாரணை தேவை...