சூளகிரி, ஓசூரில் வாட்டும் கடும் குளிர்

சூளகிரி, ஜன.11:  சூளகிரி, ஓசூரில் காலை நேரத்தில் கடும் குளிர் வாட்டி வதைப்பதால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. வழக்கமாக தேசிய நெடுஞ்சாலைகளில் மின்னல் வேகத்தில் செல்லும் வாகனங்கள், பனிமூட்டத்தால் முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டு, மெதுவாக சென்றன. 6 அடிக்கு முன்னால் செல்பவர்கள் கூட தெரியாத அளவு பனி படர்ந்திருந்தது. கடும் குளிரால் மக்கள் வெளியே வரமுடியாமல் வீடுகளுக்குள் முடங்கினர். சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி இருந்தது. காலையில் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் குளிரால் அவதிப்பட்டனர். ஸ்வெட்டர், குல்லா அணிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றனர். காலை 8 மணியாகியும் விலகாத பனியால், பஸ்சுக்காக காத்திருந்த கல்லூரி மாணவர்கள், பஸ் ஸ்டாப் பகுதியில் கிடந்த குப்பைகளுக்கு தீ மூட்டி குளிர் காய்ந்தபடி நின்றிருந்தனர். இதேபோல் ஓசூர் சுற்றுவட்டார பகுதியிலும் கடும் குளிர் வாட்டியது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.

× RELATED சூளகிரி தாலுகா அலுவலகத்தில் 5 நாட்கள் நடந்த ஜமாபந்தி நிறைவு