மாவட்டத்தில் 7 இடங்களில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

கிருஷ்ணகிரி, ஜன.11:  கிருஷ்ணகிரி  மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஜனவரி மாதத்திற்கான மக்கள் தொடர்பு திட்ட முகாம் 7 இடங்களில் நடைபெறவுள்ளது. அதன்படி, வருகிற 23ம் தேதி காலை 11 மணிக்கு, சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி அடுத்த சாமனப்பள்ளி கிராமத்தில் கலெக்டர் தலைமையிலும், பர்கூர் தாலுகா ஒரப்பம் கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது. இதே போல் வருகிற 30ம் தேதி காலை 10 மணிக்கு, ஓசூர் தாலுகா பேரண்டப்பள்ளி கிராமத்தில் ஓசூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும், போச்சம்பள்ளி தாலுகா மத்தூர் அடுத்த சோனாரள்ளி கிராமத்தில் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும், ஊத்தங்கரை தாலுகா சாமல்பட்டி அடுத்த கருமாண்டபதி கிராமத்தில் உதவி ஆணையர் (ஆயம்) தலைமையிலும் முகாம் நடைபெறுகிறது.

இதேபோல், கிருஷ்ணகிரி தாலுகா ஆலப்பட்டி அடுத்த சோக்காடி கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும், தேன்கனிக்கோட்டை தாலுகா மல்லசந்திரம் கிராமத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையிலும் முகாம் நடக்கிறது. எனவே, இந்த முகாம்களில் அந்தந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தவறாமல் பங்கேற்று, கோரிக்கை மனுக்களை கொடுத்து குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

× RELATED ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பா?:...