×

புதர்மண்டிய புலிக்கரை ஏரி தூர்வாரும் பணி தீவிரம்

தர்மபுரி, ஜன.11: தர்மபுரி அருகே புலிக்கரை ஏரியை ₹50 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.தர்மபுரி மாவட்டத்தில் 74 பொதுப்பணித்துறை ஏரிகளும், ஊராட்சி நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள 634 ஏரிகளும் உள்ளன. போதிய மழை பெய்யாததால், ஏரிகள் அனைத்தும் வறண்டு உள்ளன. சோகத்தூர் ஏரி, அன்னசாகரம் ஏரி, பைசுஅள்ளி ஏரி, பாப்பாரப்பட்டி ஏரி, இண்டூர் ஏரி, லளிகம் ஏரி, செட்டிக்கரை, கடகத்தூர் ஏரி உள்ளிட்ட ஏரிகளில் முட்செடிகள் வளர்ந்து காடுபோல் உள்ளது. இதேபோல், சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட புலிக்கரை ஏரிக்கு தண்ணீர் வரும் கால்வாய் பகுதிகள், தூர்வாராததால் முட்செடிகள் வளர்ந்த நிலையில் இருந்தது.தற்போது மாவட்ட நிர்வாகம், பவர்கிரிட், நெய்வேலி நிலக்கரி சுரங்க துறை இணைந்து, ₹50 லட்சம் மதிப்பில் புலிக்கரை ஏரியை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பாலக்கோடு ஜெர்தலாவ் கால்வாயின் 5 ஆயிரம் மீட்டரிலிருந்து, புலிக்கரை ஏரி வரை கால்வாய் அமைக்கும் திட்டத்தை, தமிழக அரசு அறிவித்துள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தற்போது புலிக்கரை ஏரி தூர்வாரும் பணி நடந்து வருகிறது. அதேபோல், எண்ணேகொல்புதூர் வலதுபுறக் கால்வாயிலிருந்து தும்பலஅள்ளி அணைக்கட்டுக்கு கால்வாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த, அரசு அனுமதி அளித்துள்ளது,’ என்றனர்.





Tags : tsunami lake lake ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா