ஊராட்சி மன்ற அலுவலகத்தை விவசாய தொழிலாளர்கள் முற்றுகை - வையம்பட்டி அருகே பரபரப்பு

மணப்பாறை, ஜன.11: வையம்பட்டி அருகே நூறு நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு ஊதியம் வழங்குவதில் முறைகேடு கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி  மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகேயுள்ளது முகவனூர்.  இந்த  ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு  ஊதியம் வழங்குவதில் முறைகேடு நடப்பதாகவும், தோட்டத்தில் அளவீடுபடி  வேலை செய்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கிய நிர்வாகத்தை  கண்டித்தும், நேற்று முகவனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தமிழ்மாநில  விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சண்முகானந்தம் தலைமையில்  விவசாய தொழிலாளர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வையம்பட்டி  வட்டார வளர்ச்சி  அலுவலர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஊதியத்தை பிப்ரவரி  முதல் வாரத்திற்குள் வழங்கப்படும்  என்றும், தோட்டத்தில் பணிபுரிகிற தொழிலாளர்களுக்கு சட்டக்கூலி வழங்க  நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக  ஒத்திவைத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு  ஏற்பட்டது.× RELATED வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து...