துறையூர் அருகே கண்ணனூர் பகுதியில் அடுத்தடுத்து திருட்டு பொதுமக்கள் பீதி

துறையூர், ஜன.11:துறையூர் அருகே கண்ணனூர் பகுதிகளில் வீடுகள் முன் நின்ற பைக்குகள் மற்றும் ஓட்டலில் ஸ்டவ் அடுப்பு, சிலிண்டர் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அடுத்தடுத்து நடந்த திருட்டால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கண்ணனூர் பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி நல்லதம்பி. பாளையம் பிரிவுரோடு அருகே வசிக்கிறார். இவர் கடந்த 8ம் தேதி இரவு தனது பைக்கை வீட்டின் அருகே நிறுத்தி பூட்டி விட்டு வழக்கம்போல் படுக்கச் சென்றார். காலையில் எழுந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. இதேபோல் பொன்னுசங்கம்பட்டியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (45) மின் வாரியத்தில் வேலை பார்க்கிறார். இவரது வீடு பொன்னுசங்கம்பட்டி மெயின் ரோட்டில் உள்ளது. இவர் கடந்த 8ம் தேதி இரவு தனது வீட்டு முன்பு வழக்கம் போல் பைக்கை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார். காலையில் எழுந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. இது குறித்து இருவரும் ஜெம்புநாதபுரம் போலீசில் புகார் செய்தனர்.
மேலும் கண்ணனூரில் சின்னசேலம்பட்டி ரோட்டில் முருகன்கோயில் அருகில் அடுத்தடுத்துள்ள  இரண்டு ஓட்டல்கள் மற்றும் ஓட்டல் தொழிலாளி ஒருவரின் வீடு ஆகிய இடங்களில் ஸ்டவ் அடுப்பு, சிலிண்டர், பாய்லர் போன்றவற்றையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.   இதுகுறித்த புகார்களின் அடிப்படையில் ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்கு பதியாமல் விசாரித்து வருகின்றனர். இப்பகுதிகளில் நடந்து வரும் தொடர் திருட்டால் மக்கள் பீதியில் உள்ளனர்.

× RELATED நரிக்குறவர்கள் மனு அரியலூர் பகுதியில் மழை பொதுமக்கள் மகிழ்ச்சி