வக்கீல் கொலை வழக்கில் 6 பேரிடம் போலீசார் விசாரணை

மணப்பாறை, ஜன.11: மணப்பாறையில் நடந்த வக்கீல் கொலை வழக்கில் 6 பேரிடம் போலீசார்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் குபேந்திரன் மகன் ஜெகதீஸ் பாண்டி (30) வழக்கறிஞர். இவர் தனது அண்ணன்கள் சிலம்பரசன்(35), சவுந்தரபாண்டி(34), மைத்துனர் ஜெயபாண்டி(34) ஆகியோருடன் சேர்ந்து வெளி மாநிலங்களிலிருந்து தென் மாவட்டங்களுக்கு வரும் கார்களை ஷோரூம்களில் இறக்கும் கான்ட்ராக்ட் தொழில் செய்து வந்தார்.இதேபோல் திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்னொரு தரப்பினர் கான்ட்ராக்ட் எடுத்து தொழில் செய்து வந்தனர். கடந்த 9 மாதங்களுக்கு முன்  வக்கீல் ஜெகதீஸ் பாண்டி, திருச்சி கான்ட்ராக்டை வேறு ஒருவருக்கு வாங்கி கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்கனவே திருச்சியில் கான்ட்ராக்ட் செய்தவர்களுக்கும், வக்கீல் ஜெகதீஸ் பாண்டிக்கும் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில்
இப்பிரச்சனையை பேசி தீர்ப்பதற்காக ஜெகதீஷ்பாண்டியை தோகைமலை அருகேயுள்ள அய்யர்மலைக்கு வருமாறு திருச்சி கான்ட்ராக்டை இழந்தவர்கள் அழைத்துள்ளனர். அதனை நம்பி ஜெகதீஸ்பாண்டி, அவரது சகோதரர்கள் சிலம்பரசன், சவுந்தர பாண்டி, மைத்துனர் உள்ளிட்ட 6 பேர் நேற்றுமுன்தினம் காரில் புறப்பட்டனர். கார் மணப்பாறையை கடந்து குளித்தலை ரோட்டில் செல்லும்போது மர்ம நபர்கள் காரை குறுக்கே நிறுத்தி மறித்து 8 பேர் காரிலிருந்து கீழே இறங்கி ஜெகதீஸ்பாண்டியையும், அவருடன் வந்தவர்களையும் அரிவாளால் வெட்டிவிட்டு காரில் தப்பி ஓடிவிட்டனர்.
இதில் வழக்கறிஞர் ஜெகதீஸ்பாண்டி பலியானார். சிலம்பரசன், ஜெயபாண்டி ஆகியோர் படுகாயமடைந்தனர். மணப்பாறை போலீசார் உடலை கைப்பற்றி வழக்குப்பதிந்து  கொலை தொடர்பாக அரவிந்த், பாலமுருகன், பிரபு, தங்கமலை, செல்வம், விக்னேஷ் ஆகிய 6 பேரை பிடித்து தீவிர விசாரணை வருகின்றனர்.

× RELATED மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர்...