×

கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு உதவித்தொகை வழங்குவதில் இழுபறி - பெண்கள் வேதனை

மன்னார்குடி, ஜன.11: திருவாரூர் மாவட்டத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு  கடந்த 10 மாதங்களாக மகப்பேறு உதவித் தொகை வழங்குவதில் இழுபறி நீடிப்பதால் பெண்கள் வேதனை அடைந்துள்ளனர். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித்திட்டம் கடந்த 2006-07ம் ஆண்டு முதல் தொடங்கி செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கருவுற்ற பெண்களுக்கு மகப்பேறு நிதியுதவியாக ரூ.6 ஆயிரமாக  வழங்கப்பட்டு வந்தது. இது 2006-07ம் ஆண்டு முதல் ரூ.12 ஆயிரமாக  உயர்த்தப்பட்டது. மேலும் 2017-18ம் ஆண்டு முதல் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியுதவி ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டது. இதில் கருவுற்று மகப்பேறு நிதியுதவி திட்டத்திற்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நிதி வழங்கப்பட்டு வந்தது. இத்திட்டம் குழந்தை இறப்பு விகிதம் மற்றும் தாய்மார்கள் இறப்பு விகிதம் போன்றவற்றை குறைக்க  காரணமாக இருந்தது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு 5 தவணை முறைகளில் ரூ.14 ஆயிரம் ரொக்கமாகவும், ரூ.4 ஆயிரம் மதிப்பிலான ஊட்டச்சத்து பரிசு பெட்டகமும் வழங்கப்பட்டது. இவை அனைத்தும் கடந்த 10 மாதங்களாக திருவாரூர் மாவட்டத்தில் வழங்கப்படாததால் கர்ப்பிணி பெண்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர். மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக ஊதிய உயர்வு கேட்டு தமிழக அரசு மருத்துவர்கள் கடந்த 6 மாத காலமாக பல்வேறு கட்ட அறவழிபோராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு செவிமெடுக்க மறுப்பதால் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 8,706 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு துணை சுகாதார நிலையத்திலும் சராசரியாக 4 பேர் வீதம் மாநிலம் முழுவதும் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்படுவர்கள்.
 மகப்பேற்றின்போது தாய், சேய் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. 35 ஆயிரம் பேருக்கு இந்த உதவி  வழங்கப்படவில்லை என்றால் அது தாய்-சேய் இறப்பு விகிதத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு  நிதியுதவித் திட்டத்தின் கீழ் நிதியுதவிக்காக விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் நிதியுதவி உடனடியாக வழங்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட கர்ப்பிணி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மன்னார்குடி ராமபுரத்தைச் சேர்ந்த வனிதா கூறியது: டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ரூ.12 ஆயிரம் நிதியுதவியை அரசு 18 ஆயிரமாக உயர்த்தி வழங்க அரசு ஆணையிட்டது கர்ப்பிணி பெண்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. மேலும் பெண்களுக்கு பரவலாக உள்ள ரத்த சோகையைப் போக்கவும், பிறக்கும் குழந்தைகளின் எடையளவை உயர்த்தவும் இத்திட்ட நிதியில் ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள இரும்புச்சத்து டானிக் மற்றும் ஊட்டச்சத்துப் பொருட்கள் அடங்கிய தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம்  வழங்குவதும் வரவேற்கத்தக்கதே. மேலும் முதல்வர் குழந்தை நல பரிசுப் பெட்டகம், மகப்பேறு சஞ்சீவி போன்ற திட்டங்களையும் அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என்று சட்டசபையில்  அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்புகள் வெற்று அறிவிப்புகளாக இருப்பதால் எங்களை போன்ற கர்ப்பிணி  பெண்களுக்கு எந்த பயனும், பலனும் தரவில்லை. மேலும் இத்திட்டத்தின் நோக்கங்கள் வெற்றி பெற கர்ப்பிணி பெண்களுக்கு கடந்த 10 மாதங்களாக வழங்க வேண்டிய நிதி உதவியை அரசு உடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்திட்டம் ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கானது என்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி கிடைக்க மருத்துவ துறையில் பணியாற்றும் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.


Tags : Women ,
× RELATED வெள்ளியணை, வாங்கல் அருகே குடும்ப தகராறில் 2 பெண்கள் தற்கொலை