செங்கல், கருங்கல் குவியல் மீதுதனியார் பஸ் மோதி விபத்து - 15 பேர் காயம்

திருவாரூர், ஜன.11: திருவாரூரில் நேற்று தனியார் பஸ் ஒன்று சாலையோரத்தில் இருந்த செங்கல் குவியல் மீது மோதியதில் டிரைவர் உட்பட 15 பேர் காயமடைந்தனர். நாகை மாவட்டம், தேவூரிலிருந்து திருவாரூர் நோக்கி நேற்று தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதேபோல் திருவாரூரிலிருந்து கீவளூர் நோக்கி தனியார் மினி பஸ் ஒன்றும் சென்று கொண்டிருந்தது. இந்த 2 பஸ்களும் திருவாரூர் வாளவாய்க்கால் என்ற இடத்தில் எதிரெதிரே சென்று கொண்டிருந்த நிலையில் இடையில் திடீரென புகுந்த பைக் ஒன்றின் மீது மோதாமல் இருப்பதற்காக தேவூரிலிருந்து திருவாரூர் சென்ற தனியார் பஸ்சின் டிரைவர் ஆனந்த் (24) பஸ்சை இடது பக்கமாக திருப்பினார். அப்போது எதிர்பாராவிதமாக சாலை ஓரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கல் மற்றும் கருங்கல் ஜல்லி குவியல் மீது பஸ் மோதியது. இதில் டிரைவர் ஆனந்த் மற்றும் பஸ்சில் பயணம் செய்த 13 பயணிகள், பைக்கை ஓட்டிச் சென்ற திருவாரூர் அலிவலத்தை சேர்ந்த கார்த்திக் (34) என மொத்தம் 15 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையானது மிகவும் சேதமடைந்து போக்குவரத்திற்கு பயனற்ற சாலையாக இருந்து வருவதால்தான் இந்த விபத்து நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.


× RELATED ஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து...