பூட்டியே கிடக்கும் கிராம ஊராட்சி சேவை மையம் - பயன்பாட்டிற்குவிட மக்கள் வலியுறுத்தல்

மன்னார்குடி, ஜன.11: கோட்டூர் அருகே கெலுவத்தூர் கிராமத்தில் ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்டு கடந்த 2014ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் காணொளி காட்சி  மூலம் திறக்கப்பட்ட கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடம் பூட்டியே கிடப்பதால் அதனை மக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து திறந்து விட வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.மத்திய அரசு கடந்த 2005ம் ஆண்டு ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தினை கொண்டு வந்தது. இத்திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு கிராமங்களில்  ஊராட்சி சேவை மைய கட்டிடங்கள் கட்டப்பட்டன.
பேரிடர் காலங்களில் மக்கள் பாதுகாப்பாக தங்கியிருக்கவும், மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள் சுய தொழில்கள் செய்வதற்கு ஏதுவாகவும், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்களுக்கு அலுவலமாகவும் மற்றும் கிராம மக்களுக்கு அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை அளிப்பதற்கு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின்  பயன்பாட்டிற்காக கிராம   ஊராட்சி சேவை மைய கட்டிடங்கள் கட்டப்பட்டன.
 திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட கெலுவத்தூர் ஊராட்சியில் ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கடந்த 2014ம் ஆண்டு ரூ.15 லட்சத்தில் கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. இதனை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்ததாக கூறப்படுகிறது.
ஆனால்,  தற்போது வரை அக்கட்டிடம்  மக்கள் பயன்பட்டிக்காக திறந்துவிடப்படவில்லை. கடந்த 4 வருடமாக பராமரிப்பு இல்லாமல்  பூட்டியே கிடப்பதால் கட்டிடத்தின் உள்பகுதியில் தரையில் போடப்பட்ட டைல்ஸ்கள் பெயர்ந்து சுவர்கள் சேதமடைந்துள்ளது. இக்கட்டிடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென அப்பகுதி மக்கள் பல முறை அரசுக்கு மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் பலனில்லை.
 இதுகுறித்து அக்கிராமத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர் ரவீந்திரன் கூறுகையில், கிராம மக்களின் வளர்ச்சிக்காக கட்டப்பட்ட அரசு  கட்டிடம் 4 வருடங்களாக திறக்கப்படாதது ஏற்புடையதல்ல. மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடம் போதிய பராமரிப்பு இல்லாததால் சிதிலமடைந்து வருவதை கண்டு  வேதனையை அளிக்கிறது.
அரசு அதிகாரிகள் இதில் உரிய கவனத்தை செலுத்தி கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில்  சேதமடைந்த பகுதிகளை சீரமைத்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வரவேண்டும் என்றார்.


× RELATED குடிக்க தண்ணீர் தர முடியாதவர்கள்...