முத்துப்பேட்டையில் பொங்கல் கோல அச்சு விற்பனை சூடுபிடித்தது

முத்துப்பேட்டை, ஜன.11: முத்துப்பேட்டை பகுதியில் பொங்கல் கோலம் போடும் அச்சுகள் விற்பனை சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.  
 தை மாதம் என்றாலே பொங்கல் களைக்கட்டி நிற்கும். அதேபோல் பொங்கலன்று வீடுகள் முன்பு பெண்கள் போடும் கோலங்கள்தான் இதில் மிக முக்கியமானது. கோலத்தின் அழகை வைத்தே அந்த வீட்டில் பொங்கல் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியை உணர முடியும். அதனால் பெண்கள் தங்களது வீட்டு வாசல்களில் பொங்கலை வரவேற்று போடும் கோலங்களை பலவிதங்களில் ஆர்வத்துடன் போடுவது உண்டு. நம் மூதாதையர்கள் அரிசி மாவில்தான் கோலம் போட்டனர். அது அன்னதானத்துக்கு சமமாக கருதப்பட்டது. அறிவியல் வளர்ச்சியால் நம் வாழ்க்கை சூழல் மாறி இன்று கோலம் போடும் கலாசாரம் குறைந்துவிட்டது.
 கோலம் போட சில விதிகள் உள்ளது. அதற்கு ஏற்ப கோலமிட்டால் வாழ்க்கையில் வளம் சேரும். சூரியன் உதிப்பதற்கு முன்பு பசுஞ்சாணம் தெளித்து கோலம் போட வேண்டும். வீட்டு வாசலில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். எனவே புது தண்ணீரே தெளிக்க வேண்டும்.
தெற்கு பார்த்தோ, தெற்கில் முடியும்படியோ கோலம் போடக்கூடாது. கோலம் போட்டதும் காவி இடுவது மும்மூர்த்திகளை குறிக்கும். சாணத்தின் பசுமை விஷ்ணுவையும், கோலமாவின் வெண்மை பிரம்மாவையும், காவியோட செம்மை சிவனையும் குறிக்கிறது. கோலத்தின் நடுவில் செம்பருத்தி, பூசணி பூ வைத்தால் செல்வம் சேரும். வியாழக்கிழமை துளசி மாட கோலம். வெள்ளிக்கிழமை எட்டு இதழ் தாமரை கோலம் போடுவது நல்லது. சனிக்கிழமை பவளமல்லி கோலம் போட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். பவுர்ணமி தினத்தன்று தாமரைப்பூ கோலம் போடுவது சிறப்பு.
 ஞாயிற்றுக்கிழமை செந்தாமரை கோலம், திங்கட்கிழமை அல்லி மலர்க்கோலம் போடுவது நல்லது.
வீட்டுச்சுவரையொட்டி போடும் பார்டர் கோலம் தீய சக்திகளை உள்ளே விடாது.  செவ்வாய்க்கிழமை வில்வ இலை கோலம், புதன் மாவிலைக்கோலம் போடவேண்டும். விழா நாட்களில் இலை கோலம் போடுவது சிறப்பாக இருக்கும். கோலத்தின் 8 பக்கத்திலும் பூக்கள் வைத்தால் திக்பாலர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். இறந்தவர்களுக்கு செய்யும் விஷேசம், பித்ரு நாட்களில் கோலமிடக்கூடாது. இடது கையால் கோலம் போடக்கூடாது.
பெண்கள் குனிந்து நின்றே கோலம் போட வேண்டும். உட்கார்ந்து போட்டால் செல்வம் குறையும். கணவர் வெளியில் செல்லும் முன்பே கோலம் போட்டுவிடவேண்டும். கோலம் போட்ட பிறகே அடுப்பு பற்ற வைக்க வேண்டும். கிழமைக்கு ஏற்ப வாசலில் கோலமிட்டால் கெட்ட ஆவிகள் நம் வீட்டை நெருங்காது. சுபகாரியங்களுக்கு ஒரு கோடு போடக்கூடாது.
அசுப காரியங்களுக்கு இரட்டைக்கோடு கூடாது. வேலைக்காரர்களைக்கொண்டு கோலமிடக்கூடாது. கோலமானது குடும்பத்தின் வாசலிலும், பூஜையறையிலும் பெண்கள் அரிசி மாவினால் மண்ணின் மீது வரையும் ஓவியக்கலையாகும்.  
 நம் முன்னோர்கள் கோலத்தை உருவாக்கிய காரணத்தையே நாம் இன்று மறந்துவிட்டோம். இப்படி நிறைய மாற்றங்களை கடந்தாலும் இந்த காலத்திற்கு ஏற்றதுபோல் நிறைய கோல அச்சுகளும் வந்துவிட்டது. இந்நிலையில் முத்துப்பேட்டை பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளி மாநில இளைஞர்கள் பிழைப்பிற்காக விதவிதமான கோல அச்சுகளை கொண்டு வந்து விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் முத்துப்பேட்டை காவல் நிலையம் முன்பு சாலையோரத்தில் மகாராஸ்டிரா மாநிலத்தை சேர்ந்த சச்சின் என்ற இளைஞர் விதவிதமான சலிக்கும் சல்லடை வடிவில் கோல அச்சுகள் விற்பனை செய்தார். மேலும் அங்கேயே பொங்கலை வரவேற்கும் கோலங்கள் உட்பட விதவிதமான அழுகு கோலங்களை மக்கள் மத்தியில் வரைந்து விற்பனையில் ஈடுபட்டார். அதனை மக்கள் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்ததுடன் வாங்கியும் சென்றனர்.
 மகாராஸ்டிரா இளைஞர் சச்சின் கூறுகையில், ஒரு கோல அச்சு ரூ.20, 15 என விற்பனை செய்கிறேன். இன்னும் குறைத்து கேட்டாலும் கொடுத்துவிடுவேன். சீசனுக்கு ஏற்ப பொருட்கள் மொத்தமாக  வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறேன். இந்த தொழில் எனக்கு ரொம்பவே பிடித்துள்ளது. விற்பனையும் மனதை திருப்திபடுத்தியுள்ளது என்றார்.


× RELATED நுகர்வோர் மையம் வலியுறுத்தல்...