×

புயலால் சேதமடைந்த மல்லிகை செடிகளால் விவசாயிகள் கவலை நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

ஆலங்குடி, ஜன.11: ஆலங்குடி பகுதியில் கஜா புயலின் கோரதாண்டவத்தால் மல்லிகை பூ செடிகள்  சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். உடனடியாக நிவாரணம் வழங்க மாவட்ட  நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆலங்குடி தாலுகாவிற்குட்பட்ட நெடுவாசல், அணவயல், கொத்தமங்கலம், கீரமங்கலம், வடகாடு, மாங்காடு, புள்ளான்விடுதி, பள்ளத்திவிடுதி, கீழாத்தூர், மேலாத்தூர், குப்பகுடி, வம்பன் ஆகிய பகுதிகளிலும் அதேபோல் கறம்பக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட மாங்கோட்டை, தெற்குத்தெரு, காத்தான்விடுதி, களபம், துவரங்கொல்லைப்பட்டி ஆகிய பகுதிகளிலும் விவசாயிகள் அதிக அளவில் கடலை, சோளம், மிளகாய், பாசிப்பயறு, உளுந்து, எள், வாழை, பூ போன்ற பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் உள்ள விவசாயிகள் பருவ மழையை நம்பிதான் தங்களது மானாவாரி நிலங்களில் விவசாயம் செய்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்துபோனதால் மானாவாரி நிலங்களில் விவசாயம் செய்த விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
 புதுக்கோட்டை மாவட்டத்திலேயே அதிக அளவு விவசாயம் செய்யும் பகுதிகளான ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட வடகாடு, புள்ளான்விடுதி, நெடுவாசல், மாங்காடு, கொத்தமங்கலம், கீரமங்கலம், மேற்பனைக்காடு, கீழாத்தூர், மேலாத்தூர், குப்பகுடி, வம்பன் உள்ளிட்ட சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள் கிணற்று பாசனம் மூலம் அதிக அளவில் மல்லிகை பூ விவசாய சாகுபடியில் ஈடுபட்டு வந்தனர். மேலும், கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நீர்மட்டம் குறைந்ததால் கிணறுகளும் தண்ணீரின்றி வற்றியது. ஆனாலும் மனம் தளராத விவசாயிகள் சுமார் 350 அடி ஆழத்திற்கு ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் நீர்மட்டம் அதள பாதாளத்திற்கு சென்றதால், ஆழ்குழாய் கிணறுகளும் வற்றத் தொடங்கிவிட்டன.
 இந்நிலையில், மழை இல்லாமல் போனதால் நீர்மட்டம் குறைந்து விட்டது என்று விவசாயிகள் சற்றும் மனம் தளராமல் 600 அடி முதல் 1000 அடி ஆழத்திற்கு ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து விவசாயத்தில் ஈடுபட்டனர். ஆனால், தற்போது அந்த ஆழ்குழாய் கிணறுகளும் தண்ணீரின்றி வற்றத்தொடங்கிவிட்டன. மேலும் போதுமான பருவமழை பெய்தால் குளங்கள் நிரம்பும், நிலத்தடி நீர்மட்டம் உயரும். அதனால் ஆழ்குழாய் கிணறுகளுக்கு தண்ணீர் கிடைக்கும் என்று நம்பி பயிர் செய்த விவசாயிகள் எண்ணம் ஈடேறவில்லை.  இந்நிலையில், ஆழ்துளை கிணறுகளை அமைத்து அதிலிருந்து மல்லிகை பூ உள்ளிட்ட பல்வேறு பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தனர். ஆனால், தற்போது ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் இல்லாததால், பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டநிலையில், ஒருசில விவசாயிகள் ஆழ்துளை கிணற்றிலிருந்து வரும் சிறிதளவு தண்ணீரை பயன்படுத்தி மல்லிகை பூ விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், கஜா புயலின் கோரதாண்டவத்தால், மல்லிகை பூ செடிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால், மல்லிகை பூ சாகுபடியை மட்டும் நம்பியிருந்த விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ஆரம்பத்தில் வானம் பார்த்த பூமியாக எங்கள் பகுதி இருந்தபோது, பருவ மழை நன்கு பெய்யும். அதனால் அதிக அளவிலான மல்லிகை பூ உற்பத்தி செய்து கீரமங்கலம் மற்றும் புதுக்கோட்டை மலர் சந்தைகளின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு மட்டுமல்லாது வெளிமாநிலத்திற்கும் ஏற்றுமதி செய்து வந்தோம். அதன்பிறகு பருவ மழை படிப்படியாக குறையத்தொடங்கிய காலகட்டத்தில் எங்கள் பகுதியில் உள்ள விவசாயிகள் மல்லிகை பூ போன்ற பயிர்களை பாதுகாப்பதற்காக ஆழ்துளை கிணறு அமைத்தோம்.  அதிலிருந்து இரவு, பகல் பாராமல் தண்ணீர் பாய்ச்சி சாகுபடி செய்து வந்தோம். ஆனால் தற்போது பருவ மழை பொய்த்துப்போனதால் ஆழ்துளை கிணறுகள் எல்லாம் வற்றிப்போய் தண்ணீர் வராமல் நின்று போனது. இதனால் பல ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட மல்லிகை பூ உள்ளிட்ட பயிர்கள் பட்டுப்போய்விட்டது. இருப்பினும் ஒரு சில விவசாயிகள் சுமார் 1000 அடிக்கு அதிகமான ஆளமுள்ள ஆழ்துளை கிணறுகளை அமைத்து, அதிலிருந்து வரும் சிறிதளவு தண்ணீரை பயன்படுத்தி மல்லிகை பூ சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். இருப்பினும் கஜா புயலினால், மல்லிகை பூ செடிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக விவசாயிகள் பயிரிடப்பட்டிருந்த மல்லிகை பூ செடிகள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Tags : storm ,
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...