புதுக்கோட்டை மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

புதுக்கோட்டை, ஜன.11: புதுகை மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குனர் சுப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பயிர்களான மக்காச்சோளம், பயறு வகை பயிர்கள், எண்ணெய்வித்து பயிர்கள் ஆகியவற்றிற்கு நடப்பு 2018-19ம் ஆண்டில் பயிர் காப்பீடு செய்வதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ரபி பருவ பயிர்களான மக்காச்சோளம், சோளம், கம்பு, உளுந்து, நிலக்கடலை, எள் ஆகிய பயிர்களுக்கு பிரிமியம் செலுத்துவதற்கு வருகிற 15ம் தேதியும், நெல் (கோடை) பயிருக்கு பிரிமியம் செலுத்துவதற்கு வருகிற பிப்ரவரி 15ம் தேதியும் கடைசி நாளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நெல் (நவரை, கோடை) பயிருக்கு ஏக்கருக்கு ரூ.407ம், மக்காச்சோளத்திற்கு ரூ.304ம், உளுந்து பயிருக்கு ரூ.215ம், நிலக்கடலை பயிருக்கு ரூ.323ம், எள் பயிருக்கு ரூ.99ம் விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமிய தொகை ஆகும். புதுக்கோட்டை மாவட்டத்தில் நெல் (துவரை) பயிருக்கு 25 வருவாய் கிராமங்களும், மக்காச்சோளத்திற்கு 83 வருவாய் கிராமங்களும், உளுந்து பயிருக்கு 64 வருவாய் கிராமங்களும், நிலக்கடலை பயிருக்கு 89 வருவாய் கிராமங்களும் மற்றும் கரும்பு பயிருக்கு 180 வருவாய் கிராமங்களும் அறிவிப்பு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
 இந்த திட்டத்தின் கீழ், பதிவு செய்ய விரும்பும் விவசாயிகள் பதிவு படிவத்துடன் சிட்டா, கிராம நிர்வாக அதிகாரியால் வழங்கப்படும் அடங்கல் அல்லது உதவி வேளாண் அலுவலரால் வழங்கப்படும் பயிர் சாகுபடி சான்று, ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முன்பக்க நகல் ஆகியவற்றுடன் பிரிமிய தொகையினை செலுத்த வேண்டும். எனவே விவசாயிகள் தங்கள் அருகே உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திலோ அல்லது சம்மந்தப்பட்ட வேளாண் விரிவாக்க மையத்தையோ தொடர்பு கொண்டு  பயிர்களுக்கு அறிவிக்கை செய்யப்பட்டுள்ளதா என்ற விபரம் அறிந்து இறுதி நாள் வரை காத்திராமல் உடன் பயிர் காப்பீடு செய்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

× RELATED பயிர் காப்பீடு தொகை பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்