சீர்காழி அருகே மக்களை அச்சுறுத்தி வரும் இடிந்த பாலம் - புதிதாக கட்ட கோரிக்கை

சீர்காழி, ஜன.11: சீர்காழி அருகே மக்களை அச்சுறுத்தி வரும் இடிந்த பாலத்தை, இடித்துவிட்டு புதிதாக கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் கோயிலில் இருந்து கருகுடி செல்லும் சாலையில் நண்டோடை ஆற்றிற்கும், குளத்திற்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலம் பழுதடைந்து இடிந்து விழுந்துள்ளது. இதனால் பாலத்தின் ஒரு பகுதியில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து எழுந்து செல்கின்றனர். பாலம் பழுதடைந்து பல மாதங்கள் கடந்தும் உடைந்த பாலத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இடிந்து விழுந்த பாலத்தை கனரக வாகனங்கள் கடந்து சென்றால் பாலம் முழுவதும் இடிந்து விழுந்து போக்குவரத்து துண்டிக்கும் நிலை ஏற்படும்.
இதனால் உயிர்பலி சம்பவங்களும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. உயிர் இழப்பு சம்பவங்கள் ஏற்படுவதற்குள் இடிந்த பாலத்தை முற்றிலும் இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும். தரமற்ற முறையில் பாலத்தை கட்டிய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

× RELATED பாலத்தின் தடுப்பு சுவரில் மொபட் மோதி பெண் பலி