விஏஓ அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

கொள்ளிடம், ஜன.11: கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரத்தில் ஒரு வருடமாக தனியார் கட்டிடத்தில் இயங்கும் வி.ஏ.ஓ அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் கொள்ளிடம் ரயில் நிலையம் அருகே ஆணைக்காரன்சத்திரம் விஏஓ அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அதிகாரிகளால் பூட்டப்பட்டு ஒரு வருடமாகிறது. இந்நிலையில் ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வி.ஏ.ஓ அலுவலகம் இயங்கி வந்தது. இந்நிலையில் ஊராட்சி அலுவலக பணிகள் அதிகமாக இருந்ததால் இடவசதி தேவைப்பட்டதால் ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சி அலுவலகத்தில் இருந்து தைக்காலில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டிடத்திற்கு சென்ற மாதம்  மாற்றப்பட்டு அங்கு இயங்கி வருகிறது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக விஏஓ அலுவலக கட்டிடம் கட்ட இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து கொள்ளிடம் சமூக சேவகர் பிரபு கூறுகையில், ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சியில் 15 கிராமங்கள் மற்றும் 15 வார்டுகள் உள்ளன. மொத்தம் உள்ள மக்கள் தொகை 13367 பேர். இதில் 10 ஆயிரத்து 862 வாக்காளர்கள் உள்ளனர். கொள்ளிடம் ஒன்றியத்தில் மிகவும் பெரிய ஊராட்சி ஆணைக்காரன்சத்திரம்தான். விவசாயிகள் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் உரிய சான்றிதழ்கள் பெற அதிக தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் நலன் கருதி பழைய கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதியதாக வி.ஏ.ஓ அலுவலகம் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


× RELATED றெக்கை கட்டி பறக்கும் தங்கத்தின்...