வேதாரண்யத்தில் கடற்கரை சாலை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

வேதாரண்யம், ஜன.11: வேதாரண்யம் கடற்கரை சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. நகராட்சி பகுதியில் 40 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வாழும் மக்களுக்கு பொழுது போக்கிற்காகவும், நடை பயிற்சிக்காவும் நாள்தோறும் கடற்கரை சென்று வருகின்றனர். மேலும் அமாவாசை, காலங்களில் கடலில் நீராட ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளுர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்து செல்கின்றனர். மேலும் இந்த சன்னதி கடலில் இறந்தவர்களின் அஸ்தியை கரைக்கவும் பல்வேறு ஊர்களில் இருந்து நாள்தோறும் வந்து செல்கின்றனர். வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கும் சுவாமியுடன் பக்தர்கள் சென்று புனித நீராடி வருகின்றனர்.இந்நிலையில் கடந்த மாதம் வீசிய கஜா புயலால் வேதாரண்யம் கடற்கரையில் கடல் நீர் உட்புகுந்து சன்னதி கடலுக்கு செல்லும் சாலை முற்றிலுமாக சேதமடைந்தது. இந்த சாலையில் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் தற்போது காணப்படுகிறது. வரும் பிப்ரவரி 2ம் தேதி தை அமாவாசை தினத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராட வேதாரண்யம் சன்னதி கடலுக்கு வருவார்கள். எனவே பக்தர்களின் நலன்கருதி போர்க்கால அடிப்படையில் இந்த சாலையினை செப்பனிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த சாலையினை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு செய்தார். கஜா புயலால் பாதித்த இந்த சன்னதி கடற்கரை சாலை ரூபாய் ஆறு கோடி செலவில் போடப்படும். அதற்கான கருத்துரு தயார் செய்யப்பட்டு அனுமதி பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் பணி துவங்கி மூன்று மாதத்தில் முடிக்கப்படும் என தெரிவித்தார்.
ஆய்வின் போது நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வேதாரண்யம் தாசில்தார் இளங்கோவன் உடனிருந்தனர். தை அமாவாசைக்காக நாலுகால் மண்டபத்தில் இருந்து மாற்றுப் பாதையில் பக்தர்கள் புனித நீராட ஏற்பாடு செய்யப்படும் என நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன்
தெரிவித்தார்.

× RELATED மெரினா கடற்கரை சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 21 பேர் கைது