அர்ஜூன் சம்பத் குறித்து கேரள போலீசார் விசாரணை

திருப்பூர், ஜன.11:திருப்பூரில், இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் குறித்து கேரளா சிறப்பு போலீசார் நேற்று விசாரணை செய்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்று பெண்கள் வழிபட்டதைத் தொடர்ந்து, எரிமேலியில் உள்ள வாவர் மசூதியிலும் பெண்களை அனுமதிக்க வேண்டும் எனக்கோரி வாவர் மசூதிக்குள் பெண்கள் நுழையும் போராட்டம் நடைபெறும் என இந்து மக்கள் கட்சி- தமிழகம் சார்பில் அறிவித்திருந்தனர். அதன்படி அந்த அமைப்பை சேர்ந்த பெண்கள் உள்ளிட்டோர் எரிமேலி செல்ல முயற்சி செய்தனர். இது தொடர்பாக திருப்பூரில் 3 பெண்களை போலீசார் தடுத்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதைக் கண்டித்தும், கேரள முதல்வர் பிரனாயி விஜயன் சபரிமலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்து இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் திருப்பூரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் வைத்து பேட்டியளித்தார். இதனைத்தொடர்ந்து நேற்று திருப்பூர் வந்த கேரள சிறப்பு பிரிவு மற்றும் பாலக்காடு போலீசார் 4 பேர், அர்ஜுன் சம்பத் மற்றும் சம்பவம் குறித்து மாநகர வடக்கு போலீஸ் நிலையத்தில் தகவல் சேகரித்தனர். மேலும், இதுகுறித்து செய்தியாளர்கள் சிலரிடம் பேசி தகவல்களைப் பெற்றுக்கொண்டனர். அத்துடன் இங்குள்ள நுண்ணறிவு பிரிவு போலீசாரிடமும் பேசி, சம்பந்தப்பட்ட அமைப்பின் முழு விவரங்கள், நிர்வாகிகள் குறித்து கேட்டுச்சென்றனர்.

Related Stories: