காவல் முன்நடத்தை சரிபார்ப்புக்கு புதிய ஆன்லைன் சேவை திருப்பூரில் துவக்கம்

திருப்பூர், ஜன.11: திருப்பூரில்  மாநகர போலீசார் சார்பில் இந்த சேவை தொடக்க நிகழ்வு போலீஸ் கமிஷ்னர் அலுவலக  வளாகத்தில் நேற்று நடைபெற்றது. போலீஸ் கமிஷனர் மனோகரன் சேவையைத்  தொடங்கி வைத்தார். துணை கமிஷனர் உமா, தெற்கு உதவி கமிஷ்னர் நவீன்குமார்  உள்ளிட்டோர் பலர் உடனிருந்தனர். மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  நடைபெற்ற நிகழ்வில் போலீஸ் கண்காணிப்பாளர் ஏ.கயல்விழி சேவையைத் துவக்கி  வைத்தார். இது குறித்து போலீசார் கூறியது: பொதுமக்கள் மற்றும் தனியார்  நிறுவனங்கள் www.eservices.tnpolice.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று  தனிநபர் விபரம் சரிபார்ப்பு, வேலை நிமித்தமான சரிபார்ப்பு, வாடகைதாரரின்  விவரம் சரிபார்ப்பு, வீட்டு வேலையாட்கள் விபரம் சரிபார்ப்பு ஆகியவற்றை  மேற்கொள்ளலாம். சேவையை பயன்படுத்த தனிநபர் ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.500  மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.1100 வீதமும் கட்டணம்  செலுத்த வேண்டும். இந்த விண்ணப்பம் பெறப்பட்ட 15 நாட்களுக்குள் போலீஸ்  முன் நடத்தை சரிபார்ப்பு பணி முடிக்கப்படும். போலீஸ் முன் நடத்தை  சரிபார்ப்பு சேவைக்காக பொதுமக்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் போலீஸ்  நிலையத்திற்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியமில்லை. பொதுமக்கள் தனியார்  நிறுவனங்கள் போலீசார் சரிபார்ப்பு அறிக்கை பெறுவதற்கு இணையதளம் மூலமாக  விண்ணப்பித்து அதற்கான அறிக்கையினை, இணையதளத்திலிருந்தே பதிவிறக்கம் செய்து  கொள்ளலாம். சேவையில் ஏதேனும் குறைகள் இருந்தால் FEEDBACK என்ற  பகுதியினை  பயன்படுத்தி புகார் அளிக்கலாம். விண்ணப்பத்தில் அளிக்கப்படும் விவரங்கள்  மற்றும் ஆவணங்களில் குறைபாடுகள் இருந்தால் விண்ணப்பமானது  நிராகரிக்கப்படும். கட்டணம் திருப்பி அளிக்கப்படாது. திருப்பூர் புறநகரில்  மங்கலம்  மற்றும் அலங்கியம் போலீஸ் நிலையங்களில் சேவை தற்போது துவங்கப்பட்டுள்ளது என்றனர்.

Related Stories: