பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு 5 சதவீத வரி விதிக்க வேண்டும்

திருப்பூர், ஜன.11: திருப்பூர் மாவட்டத்தில் பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வரி 5 சதவீதமாக மாற்ற வேண்டும் எனக்கோரி சாய ஆலை உரிமையாளர்கள் சங்க சார்பில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.இதுகுறித்து, சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தியபோது பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. மேற்படி வரிவிதிப்பினால் பொது சுத்திகரிப்பு நிலைய உறுப்பினர் சாய ஆலைகள் சாயமிடுதலுக்கான கட்டணத்தை கூட்ட நேரிடும் என்பதால் மேற்படி வரியை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக மாற்றியமைக்குமாறு ஜி.எஸ்.டி கவுன்சிலிடம் பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், மேற்படி வரியை 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைத்து ஜனவரி 2018ல் அறிவிப்பு வெளியானது. பொது சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான வரியை 5 சதவீதமாக குறைக்காத பட்சத்தில் அவற்றின் உறுப்பினர் சாய ஆலைகள் ஜி.எஸ்.டி கட்டுவதன் மூலமாக நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். எனவே, மேற்படி வரியை 5 சதவீதம் ஆக குறைக்க கோரி மத்திய நிதியமைச்சரிடமும், ஜி.எஸ்.டி கவுன்சிலிடமும் முறையிடப்பட்டது. இது சம்பந்தமாக தொடர் முயற்சி மேற்கொள்ளப்பட்டு நேற்று முன்தினம் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு நேரில் சந்தித்தனர். பின்னர், அவரிடம் இதனால் சிறிய மற்றும் நடுத்தர சாய ஆலைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பது பற்றியும், அதன் எதிரொலியாக பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் பாதிப்பிற்கு உள்ளாகும் என்பது பற்றியும் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. எங்களது கோரிக்கையை பெற்றுக்கொண்டு பரிசீலித்து அதற்கான பரிந்துரையை நிதி அமைச்சகத்திற்கு அனுப்புவதாகவும், மத்திய நிதி அமைச்சரிடம் நேரில் எடுத்துரைப்பதாகவும் தெரிவித்தார்கள். எனவே, வரும் காலங்களில் வரியை 5 சதவீதமாக மாற்றப்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

Related Stories: