கோவையில் தொழிற்சங்கத்தினர் ரயில் மறியல் செய்ய முயற்சி

கோவை, ஜன. 11: கோவையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் நேற்று ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதனை தொடர்ந்து 530 பேர் கைது செய்யப்பட்டனர்.  மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து மத்திய தொழிற்சங்கத்தினர் சார்பில், குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்கவேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் இரண்டு நாள் வேலைநிறுத்தம் நடந்தது. 2-வது நாளாக நேற்று எல்.பி.எப்., ஐஎன்டியுசி, ஏஐடியுசி, எச்எம்எஸ், எம்எல்எப் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் கோவை ரயில் நிலையத்திற்குள் புகுந்து ரயில் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால், அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதில், பங்கேற்றவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.  தடையை மீறி இப்போராட்டத்தில் ஈடுபட்டதாக எல்.பி.எப். சார்பில் ரத்தினவேலு, பிரபாகரன், ஐஎன்டியுசி சார்பில் கோவை செல்வன், பாலசுந்தரம், ஏஐடியுசி சார்பில் ஆறுமுகம், தங்கவேலு, செல்வராஜ், எம்எல்எப் சார்பில் தியாகராஜன் மற்றும் 49 பெண்கள் உள்பட 530 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
Advertising
Advertising

Related Stories: